உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் கூடுதல் பாதுகாப்பு நெறிமுறைகள்

2 mins read
597c2ea9-0191-4541-8f86-f60dc0161cea
குறிப்பிட்ட ஒரு தடத்தையொட்டி கூம்புகளை வைக்கும் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணைய அதிகாரிகள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 3

உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியில் உச்ச நேரச் செயல்பாடுகளுக்காகக் கூடுதல் பாதுகாப்பு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

அங்கு மே 24ஆம் தேதி நேர்ந்த விபத்தைத் தொடர்ந்து இந்தப் புதிய நெறிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன.

அதிகளவில் வாகனங்கள் வரும்போது குறிப்பிட்ட ஒரு தடத்தை எதிர்த்திசைப் போக்குவரத்திற்குத் திருப்பிவிடும்போது, அதுபற்றி வாகனவோட்டிகளுக்குத் தெளிவாகக் குறிப்பிடும் வகையில் கூம்புகள், எதிரொளிப்பு வட்டுகள், மின்னும் விளக்குகள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதையும் அம்மேம்பாடுகள் உள்ளடக்கும்.

இம்மாதம் 24ஆம் தேதி கடற்பாலம் வழியாக மலேசியா நோக்கிச் சென்ற சிங்கப்பூர் கார் ஒன்று, சிங்கப்பூரை நோக்கி வந்த மலேசியப் பேருந்தின்மீது மோத நேரிட்டது. அதனையடுத்து, கார் ஓட்டுநரும் அதிலிருந்த மூன்று பயணிகளும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

குறிப்பிட்ட ஒரு தடத்தில் போக்குவரத்தைத் திருப்பிவிடும் நோக்கில் தடுப்புகளை அமைப்பதற்குமுன் அவ்விபத்து நேரிட்டதாகக் குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் ஓர் அறிக்கை வழியாகத் தெரிவித்தது.

அவ்விபத்தைத் தொடர்ந்து, எதிர்த்திசைப் போக்குவரத்தை மீண்டும் தொடங்குமுன் பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் முழுமையாக மீளாய்வு செய்யப்படும் என்றும் ஆணையம் கூறியது.

பாதுகாப்பு இடைநிறுத்த நேரத்தைத் தொடர்ந்து, மேம்படுத்தப்பட்ட நடவடிக்கைகளுடன் மே 26ஆம் தேதி நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கின. அந்நடவடிக்கைகளைப் பார்வையிட வெள்ளிக்கிழமை (மே 30) ஊடகங்கள் அழைக்கப்பட்டிருந்தன.

அதன்படி, புறப்பாட்டுத் தடங்களில் மூன்றில் ஒன்றை வருகைக்கான தடமாக மாற்ற அதிகாரிகளுக்குப் போதிய கால அவகாசம் வழங்கும் வகையில், மாலை 4 மணியளவில் அச்சோதனைச்சாவடியில் புறப்பாட்டுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

அப்படி அத்தடம் சிங்கப்பூருக்கு வரும் வாகனங்களுக்கான தடமாக மாற்றப்பட்டதும், சரக்கு வாகனங்கள் அவ்வழியே அனுமதிக்கப்படவிருந்தன.

புதிய பாதுகாப்பு மேம்பாடுகளின்படி, மின்னும் விளக்குகளின்கூடிய பாதுகாப்புத் தடுப்புகளும் கூம்புகளும் அத்தடத்தின் இறுதியில் கிட்டத்தட்ட 20 மீட்டர் நீளத்திற்கு வைக்கப்பட்டன. ஆறு அதிகாரிகள் அப்பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் 4.30 மணியளவில், சிங்கப்பூரை நோக்கிய தடங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், மலேசியாவிலிருந்து வந்த கனரக வாகனங்கள் அத்தடத்தில் அனுமதிக்கப்பட்டன.

செய்தியாளர்களிடம் பேசிய மூத்த உதவி ஆணையர் மாறன் சுப்பிரமணியன், வார இறுதியில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பயணிகள் சிங்கப்பூர் நிலவழி சோதனைச்சாவடிகளைக் கடப்பதாகக் குறிப்பிட்டார்.

“எதிர்த்திசைப் போக்குவரத்தை அனுமதிக்குமுன் பாதுகாப்பு நெறிமுறைகள் நடப்பில் இருப்பதை உறுதிசெய்யும் வகையில் கூடுதல் சோதனை அடுக்குநிலைகள் நடைமுறைப்படுத்தி இருக்கிறோம்,” என்று திரு மாறன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்