சிறப்புத் தேவைகள் உள்ள மாணவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்

2 mins read
4f8ed684-7847-41f1-ab4f-052a35b33f3e
கலப்பு டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்டுள்ள மாணவி தாராவுக்கு (வலது) தேர்வின்போது சிறப்பு ஏற்பாடுகள் வழங்கப்பட்டன. - படம்: கீதா ஷாந்தா ராம்

சிறப்புத் தேவைகள் கொண்ட மேலும் பல மாணவர்களுக்குக் கூடுதல் சிறப்பு ஏற்பாடுகள் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களில் ஒருவர் டாக்டர் கீதா ஷாந்தா ராமின் மகள் தாரா.

தாரா தொடக்கநிலை 3 மாணவி.

கல்வி கற்பது அவருக்குச் சவால்மிக்கதாக இருந்தது.

ஆனால் அவரது கணக்கிடும் திறனில் குறைபாடு இல்லை.

கேள்விகள் புரியாததே பிரச்சினையாக இருந்தது.

அவருக்கு கலப்பு டிஸ்லெக்சியா எனப்படும் கற்றல் குறைபாடு இருப்பது தெரியவந்தது.

கற்பிக்கப்படுவதைக் கேட்டு, பார்த்து உள்வாங்குவதில் அவர் சிரமப்பட்டார்.

எனவே, உளவியல் நிபுணரின் பரிந்துரைப்படி, தொடக்கநிலை இறுதி ஆண்டுத் தேர்வை தாரா எழுதிய போது தேர்வுத்தாள்களை முடிக்க அவருக்குக் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது.

அதுமட்டுமல்லாது, தேர்வுத்தாள்களில் உள்ள சொற்களுக்கு இடையிலான இடைவெளி அதிகமாகக்கப்பட்டது. அத்துடன் எழுத்துகள் பெரிதாக்கப்பட்டன.

தாய்மொழித் தேர்விலிருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

2024ஆம் ஆண்டில், ஏறத்தாழ 6,700 மாணவர்களுக்கு இதுபோன்ற சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

தேர்வுத்தாளை முடிக்க கூடுதல் நேரம், அல்லது தேர்வுத்தாளில் உள்ள கேள்விகளை வாசித்துக் காட்டும் சேவை அவற்றில் அடங்கும்.

2024ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட சிறப்பு ஏற்பாடுகளின் எண்ணிக்கை 2015ஆம் ஆண்டைவிட கிட்டத்தட்ட 60 விழுக்காடு அதிகம்.

இத்தகைய சிறப்பு ஏற்பாடுகள் தேவைப்படுவோரில் பெரும்பாலானோர் டிஸ்லெக்சியா மற்றும் எடிஎச்டி எனப்படும் (attention deficit hyperactivity disorder) குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டவர்கள்.

சிறப்பு ஏற்பாடுகள் வழங்கப்படுவோர் எண்ணிக்கையின் அதிகரிப்புக்கு சிறப்புத் தேவைகள் உள்ள மாணவர்கள் என மேலும் பல மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதே காரணமாக இருக்கக்கூடும் என்று சிங்கப்பூர் தேர்வுகள், மதிப்பீட்டுக் கழகம் தெரிவித்தது.

2023ஆம் ஆண்டு சிங்கப்பூரில் சிறப்புக் கல்வி தேவைப்படும் மாணவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 36,000. அவர்களில் 80 விழுக்காட்டினர் வழக்கமான பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள். எஞ்சியோர் சிறப்புக் கல்விப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள்.

குறிப்புச் சொற்கள்