இந்திய மரபுடைமை நிலையத்துக்கு கூடுதல் ஆதரவு

இந்திய மரபுடைமை நிலையத்துக்கு கூடுதல் ஆதரவு

1 of 2
படம்: தமிழ் முரசு
படம்: அர்பனார்க்

12 Feb 2026 - 4:44 pm

2 mins read

இந்திய மரபுடைமை நிலையம், மலாய் மரபுடைமை நிலையம், சீன கலாசார மையம் ஆகியவற்றுக்கு அரசாங்கம் மேலும் ஆதரவு வழங்கும் என்று பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு 10வது ஆண்டுநிறைவைக் கொண்டாடிய இந்திய மரபுடைமை நிலையத்தின் மக்களைச் சென்றடையும் முயற்சிகளையும் அதன் நிகழ்ச்சிகளையும் மேம்படுத்த ஆதரவளிக்கப்படும் என்று வியாழக்கிழமை (பிப்ரவரி 12) வரவுசெலவுத் திட்ட அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

பன்முகப் பண்பாடு என்பது சிங்கப்பூர் அடையாளத்தை வரையறுக்கும் ஓர் அம்சம் என்ற திரு வோங், பொதுவான, பகிரப்பட்ட அடையாளத்தை உருவாக்கும் அதேவேளையில் சிங்கப்பூர் மக்கள் தமது தனிப்பட்ட கலாசாரங்களையும் பண்பாடுளையும் போற்றிப் பேணுவதையும் சுட்டிக்காட்டினார்.

இந்த அணுகுமுறையை பிரதிபலிக்கும் சிங்கப்பூரின் கலாசார, மரபுடைமை நிலையங்கள் தொடர்ந்து வலுப்படுத்தப்படும் என்றார் அவர்.

நாட்டின் பயணத்தில் மக்களின் கலைகளும் பாரம்பரியமும் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றார் பிரதமர் வோங்.

நாம் எங்கிருந்து வந்தோம் என்பதை உணரச் செய்து, இன்று நாம் யார் என்பதை வெளிப்படுத்தி, எதிர்காலத்தில் நாம் யாராக உருவாகலாம் என்பதை கற்பனை செய்ய அவை உதவுவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், நாட்டின் பண்பாடு, பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் அரசாங்கம் கொண்டுள்ள உறுதியான ஈடுபாட்டைப் பிரதமரின் உரை காட்டுவதாக இந்திய மரபுடைமை நிலையத்தின் தலைவர் திரு ரா. ராஜாராம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

“சிங்கப்பூர் போன்ற பல்லினச் சமூகத்தில், ஒவ்வொரு இனத்தின் வேர்களை மதிப்பதும் பேணுவதும் சமூக ஒற்றுமைக்கு மிகவும் அவசியம்.

“ஒரு நாடு பொருளியல் ரீதியாக முன்னேறினாலும், அதன் கலை, கலாசாரம் வளர்ந்தால் மட்டுமே அது முழுமையான வளர்ச்சியைப் பெற்றதாகக் கருதப்படும்,” என்று திரு ராஜாராம் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்
மரபுடைமைஇந்திய மரபுடைமை நிலையம்அரசாங்கம்சிங்கப்பூர்லாரன்ஸ் வோங்ஆதரவு

தொடர்புடைய செய்திகள்