ஃபேர்பிரைஸ் ஆதரவுத் திட்டம் விரிவாக்கம்; மூத்தோருக்குக் கூடுதல் உதவி

ஃபேர்பிரைஸ் ஆதரவுத் திட்டம் விரிவாக்கம்; மூத்தோருக்குக் கூடுதல் உதவி

2 mins read
bc971f6b-7498-4067-b882-9e4a7c345727
‘புரோட்டீன் பிளெட்ஜ்’ எனப்படும் புரதச்சத்து உறுதிமொழித் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. - கோப்புப் படம்: ஃபேர்பிரைஸ் குழுமம்

ஃபேர்பிரைஸ் குழுமத்தின் நன்கொடைப் பிரிவான ஃபேர்பிரைஸ் அறநிறுவனம் நடத்தும் ‘புரோட்டீன் பிளெட்ஜ்’ எனப்படும் புரதச்சத்து உறுதிமொழித் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது.

அதன்படி, எளிதில் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ள மூத்தோருக்கு மாற்றப்படாத புரதச்சத்து (fresh protein) உணவுப்பொருள்கள் வழங்கப்படவுள்ளன. திட்டத்தின்கீழ் இனி அவர்களுக்கு இரண்டாவது உணவுப் பொருளாக பாலும் வழங்கப்படும் என்று ஃபேர்பிரைஸ் குழுமம் வியாழக்கிழமை (ஜூன் 25) ஓர் அறிக்கை மூலம் தெரிவித்தது.

வரும் 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு மில்லியன் வெள்ளி மதிப்பிலான மாற்றப்படாத புரதச்சத்து உணவை எளிதில் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளோர்க்கு விநியோகிக்கும் நோக்கில் புரதச்சத்து உறுதிமொழித் திட்டம் சென்ற ஆண்டு தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக, கிட்டத்தட்ட 46,000 பேருக்கு சென்ற ஆண்டு முட்டைகள் விநியோகிக்கப்பட்டன.

இப்போது பாலும் அத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. முதலில் ஃபேர்பிரைசின் நன்கொடை மற்றும் சமூகப் பங்காளிகளால் பயன்பெற்றுவரும் மூத்தோருக்குப் பால் விநியோகம் தொடங்கும்.

கூடுதல் ஆதரவு

புரதச்சத்து உறுதிமொழித் திட்டம் விரிவுபடுத்தப்படுவதுடன் மாதந்தோறும் கடைசி வாரத்தில் மூத்தோர், அத்தியாவசியப் பொருள்களை சலுகை விலையில் வாங்கலாம். ‘எக்ஸ்ட்ரா சீனியர் வீக்’ எனப்படும் இத்திட்டம் வியாழக்கிழமை தொடங்கியது.

‘எக்ஸ்ட்ரா சீனியர் வீக்’ மாதந்தோறும் கடைசி வியாழக்கிழமை முதல் மறுவாரம் புதன்கிழமை வரை நடப்பில் இருக்கும். அதன்கீழ் பால் மாவு, உடல்நலத் துணைப்பொருள்கள் (health supplements), பல் மற்றும் வாய்ப் பராமரிப்புப் பொருள்கள், பெரியவர்களுக்கான அணையாடை (டயப்பர்) போன்ற பொருள்களை மூத்தோர் சலுகை விலையில் வாங்கலாம்.

துடிப்பான வாழ்க்கைமுறைப் பகுதிகள்

இவற்றோடு துடிப்பான வாழ்க்கைமுறைப் பகுதிகளையும் (Active Living Zones) ஃபேர்பிரைஸ் எக்ஸ்ட்ரா அறிமுகப்படுத்தும். அப்பகுதிகளில் மூத்தோருக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்கள், சக்கர நாற்காலிகள் போன்ற நடமாட்டச் சாதனங்கள் உள்ளிட்டவற்றை வாங்கலாம்.

துடிப்பான வாழ்க்கைமுறைப் பகுதி.
துடிப்பான வாழ்க்கைமுறைப் பகுதி. - படம்: என்டியுசி

அன்றாட வாழ்க்கையில் ஊட்டச்சத்து கிடைப்பதில் மூத்தோர் எதிர்கொள்ளும் சவால்களை அறிவதற்கான கருத்தாய்வை ஃபேர்பிரைஸ் அறநிறுவனம் சென்ற ஆண்டு நடத்தியது. இளையர்களைவிட தங்களுக்குக் கூடுதல் புரதச்சத்து தேவைப்படுவதாக 67 விழுக்காட்டுப் பங்கேற்பாளர்கள் தெரிவித்திருந்ததாக ஃபேர்பிரைஸ் குழுமம் அறிக்கையில் குறிப்பிட்டது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

அதனைத் தொடர்ந்து, புரதச்சத்து உறுதிமொழித் திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்