கென்டிங் டிரீம், ஸ்டார் வோயேஜர் ஆகிய சொகுசுக் கப்பல்களில் பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொருவரும் இனி ஒவ்வொரு நாளுக்கும் கூடுதலாக 15 வெள்ளி கட்டணம் செலுத்தவேண்டும்.
மத்திய கிழக்குப் பூசல் காரணமாக எரிபொருள் விலை அதிகரித்து வருவதே இதற்குக் காரணம்.
வெள்ளிக்கிழமை (மார்ச் 20) முதல் பதிவுசெய்யும் பயணிகள் அனைவருக்கும் இது பொருந்தும் என்று ஸ்டார்குரூசஸ், டிரீம் குரூசஸ் ஆகிய இரு நிறுவனங்களும் கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 17) தனித்தனி அறிக்கைகளில் தெரிவித்தன.
இரண்டு வயது அல்லது அதைத் தாண்டிய வயதுடைய வாடிக்கையாளர்களுக்கு இந்தக் கட்டண உயர்வு பொருந்தும்.
இந்த இரண்டு நிறுவனங்களும் ஸ்டார்டிரீம் குரூசஸ் சின்னத்துக்குக்கீழ் செயல்படுபவை.
“அண்மைக் காலமாக மத்திய கிழக்கில் தொடரும் வட்டாரங்கள் சார்ந்த அரசியல் சூழலால் எண்ணெய் விலை கணிசமான அளவு கூடியுள்ளது.
“அதனால் எரிபொருள் விலைகளும் அது தொடர்பான விலையும் அதிகரித்துள்ளன,” என்று இரு சொகுசுக் கப்பல் நிறுவனங்களும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளன.
ஒவ்வொரு கப்பலும் செயல்படுவதற்கான தேவைகள், அவற்றின் பயணம் குறித்த அம்சங்கள் ஆகியவற்றைப் பொறுத்தே கூடுதல் கட்டணம் தீர்மானிக்கப்படுவதாக அவை தெரிவித்துள்ளன.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூர், அருகில் உள்ள அதற்குச் சொந்தமான துறைமுகங்களிலிருந்து பயணத்தைத் தொடங்கும் கென்டிங் டிரீம் கப்பல்கள், சிங்கப்பூர் மற்றும் கிள்ளான் துறைமுகத்திலிருந்து பயணத்தைத் தொடங்கும் ஸ்டார் வோயேஜர் கப்பல்கள் ஆகியவற்றுக்குக் கூடுதல் கட்டணம் பொருந்தும்.
அதேவேளை, ஹாங்காங்கிலிருந்து புறப்படும் ஸ்டார் வோயேஜர் கப்பல்களில் பயணம் செய்பவர்கள் ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 200 ஹாங்காங் டாலர் (33 வெள்ளி) கட்டணம் விதிக்கப்படும்.
அதேபோல் தைவானின் கீலுங்கிலிருந்து புறப்படும் ஸ்டார் நேவிகேட்டர் கப்பல்களில் பயணம் செய்வோருக்குக் கூடுதல் கட்டணமாக 600 நியூ தைவான் டாலர் (24 வெள்ளி) விதிக்கப்படும்.
எரிபொருளுக்கான கூடுதல் கட்டணம், வாடிக்கையாளர்களின் கணக்குகளில் தானாகவே சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் கட்டணம் விதிக்கத் தாங்கள் திட்டமிடவில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்கு வோர்ல்ட குரூசஸ் நிறுவனம் தெரிவித்தது.

