சீன முட்டைக்கோஸ்கள்மீது கூடுதல் சோதனை: சிங்கப்பூர் உணவு அமைப்பு

சீன முட்டைக்கோஸ்கள்மீது கூடுதல் சோதனை: சிங்கப்பூர் உணவு அமைப்பு

1 mins read
7bc81f37-9d27-4bcc-86f7-b528aa58f441
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைக்கோஸ்களில் ‘ஃபார்மல்டிஹைட்’ எனும் ஒருவகை நச்சு வேதிப்பொருள் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து சிங்கப்பூர் உணவு அமைப்பு சோதனைகளை முடுக்கிவிட்டுள்ளது. - படம்: இபிஏ
Google News Preferred Icon

சீனாவிலிருந்து வரும் முட்டைக்கோஸ்கள் அணுக்கமாய்க் கண்காணிக்கப்பட்டு, சோதிக்கப்படுவதாகச் சிங்கப்பூர் உணவு அமைப்பு தெரிவித்துள்ளது.

அங்கிருந்து தருவிக்கப்படும் முட்டைக்கோஸ்களில் ‘ஃபார்மல்டிஹைட்’ எனும் ஒருவகை நச்சு வேதிப்பொருளைக் கடைக்காரர்கள் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

“சீனாவில் முட்டைக்கோஸ்களில் ‘ஃபார்மல்டிஹைட்’ பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படும் அறிக்கைகள் குறித்து உணவு அமைப்பு அறிந்து கொண்டுள்ளது,” என்று அமைப்பு, செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 1) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

“நிலவரத்தை அமைப்பு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. மேலும் உணவுப் பாதுகாப்புக் கண்காணிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக முட்டைக்கோஸ்கள் மீதான கண்காணிப்பையும் பரிசோதனையையும் அமைப்பு தீவிரப்படுத்தியுள்ளது,” என்று அறிக்கை குறிப்பிட்டது.

தென்கொரியாவும் சீனாவிலிருந்து வரும் முட்டைக்கோஸ்களின் சோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொழில்துறையில் பயன்படுத்தப்படும் அந்த வேதிப்பொருளில் முட்டைக்கோஸ்கள் நனைத்து எடுக்கப்படுவதைக் காட்டும் காணொளிகள் இணையத்தில் பரவிவருகின்றன. அதனைத் தொடர்ந்து, சீனாவும் அதிரடிச் சோதனைகளை முடுக்கிவிட்டுள்ளது.

சீனாவின் வடக்கே உள்ள ஹெபே மாநிலத்தில் உள்ள காங்பாவ் மாவட்டத்தில், ஊழியர்கள் முட்டைக்கோஸ் வேர்களை திரவத்தில் நனைத்துப் பின்னர் அந்தக் காய்கறிகளை லாரிகளில் ஏற்றும் காட்சிகள் இணையத்தில் பரவியதை அடுத்து இந்த உணவுப் பாதுகாப்பு விவகாரம் வெடித்தது.

முட்டைக்கோஸ்களை வாங்கும்போதும் வாகனங்களில் வைத்து அனுப்பும்போதும் ‘ஃபார்மல்டிஹைட்’ பயன்படுத்தப்பட்டதை உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாகச் சீன, தென்கொரிய ஊடகங்கள் தெரிவித்தன.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்உணவுஅமைப்புசீனாகாய்கறிஇறக்குமதி