சிங்கப்பூரில் மேம்படுத்தப்பட்ட புதிய மின்சாரப் பேருந்துகள் அறிமுகம்

சிங்கப்பூரில் மேம்படுத்தப்பட்ட புதிய மின்சாரப் பேருந்துகள் அறிமுகம்

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

04 Nov 2026 - 5:55 pm

2 mins read

மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் கூடிய 660 புதிய மின்சாரப் பேருந்துகள், இவ்வாண்டின் பிற்பகுதியில் சிங்கப்பூர்ச் சாலைகளில் இயங்க உள்ளன.

இந்தப் புதிய வசதிகளால் பயணிகள் பேருந்தின் பின்பகுதிக்கு எளிதாகச் சென்றுவர இயலும். குறிப்பாக, இந்தப் புதிய மின்சாரப் பேருந்துகளின் நடுப்பாதை எந்தவிதப் படியுமின்றித் தட்டையாக அமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மூத்தோர் உள்ளிட்ட பயணிகள் பேருந்தில் ஏறுவதும் உட்புறத்தில் பின்பகுதி வரை செல்வதும், பேருந்திலிருந்து இறங்குவதும் மிகவும் சுலபமாக அமையும்.

மேலும், சற்று உயரமான மேடைகளில் அமைந்துள்ள இருக்கைகளுக்கான படிகளின் உயரம் 23 சென்டிமீட்டருக்கு மிகாமல் இருக்குமாறு வரையறுக்கப்பட்டுள்ளது. சக்கர வளைவுகளுக்கு மேலே அமைந்திருக்கும் இருக்கைகளுக்கான படிகளின் உயரம் அதிகபட்சமாக 30 சென்டிமீட்டர் வரை இருக்கும்.

பயணிகள், பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் இந்தச் சிறப்பு வடிவமைப்பு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் புதன்கிழமையன்று (நவம்பர் 4) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

படிகள் இல்லாத நடுப்பாதை அமைக்கப்பட்டதன் மூலம், இருக்கைகளுக்குச் செல்வதில் சிரமம் ஏற்பட்டதாக முதியவர்கள் முன்வைத்த புகார்களுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.

எதிர்கால மேம்பாடுகள் மற்றும் வாகனக் கொள்முதல்களின்போதும் பயணிகள், தொழில் துறைப் பங்காளிகளிடம் தொடர்ந்து கருத்துகள் பெறப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது. சிங்கப்பூரின் பொதுப் பேருந்துச் சேவைகள் அனைத்துப் பயணிகளுக்கும் பாதுகாப்பாகவும் வசதியாகவும் அமைவதை உறுதி செய்வதே இதன் தலையாய நோக்கம் என்றும் ஆணையம் கூறியது.

சன்டெக் சிங்கப்பூர் மாநாட்டு, கண்காட்சி மையத்தில் நவம்பர் 4 முதல் 6ஆம் தேதி வரை நடைபெறும் ‘சிங்கப்பூர் நகர்ப்புற நடமாட்ட வாரம்’ நிகழ்வில், புதிய வடிவமைப்புடன் கூடிய இரண்டு மின்சாரப் பேருந்துகள் செய்தியாளர்களின் பார்வைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

சீன நிறுவனங்களான பிஒய்டி, சிஆர்ஆர்சி, யூடோங், சோங்டோங் பஸ் ஆகிய நிறுவனங்கள் இந்தப் புதிய பேருந்துகளை உற்பத்தி செய்கின்றன. இவற்றுள் ஏறத்தாழ 360 பேருந்துகள் ஒற்றைத் தளப் பேருந்துகளாகவும் 300 பேருந்துகள் மூன்று கதவுகளைக் கொண்ட இரட்டைத் தளப் பேருந்துகளாகவும் இருக்கும்.

2030ஆம் ஆண்டுக்குள் சிங்கப்பூரின் பொதுப் பேருந்துகளில் பாதியை மின்சாரப் பேருந்துகளாக மாற்றும் இலக்கை எட்டுவதற்கு, இந்தப் புதிய பேருந்துகளின் பயன்பாடு மேலும் ஒரு முக்கியப் படியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
மின்சாரப் பேருந்துநிலப் போக்குவரத்து ஆணையம்பயணி