அரசாங்க அதிகாரிகள் எனத் தங்களைக் கூறிக்கொண்டு தொலைபேசி அழைப்பு வழி மோசடி செய்வோருக்கு எதிராக, எளிதில் அடையாளம் காணக்கூடிய தொலைபேசித் தொடக்க எண்கள் அறிமுகம் செய்யப்படும்.
அதேபோல, உண்மையான அரசாங்கத் தளத்திற்கே உரித்தான ‘gov.sg’ என்ற இணையத்தளப் பின்பகுதியைத் தவறாகப் பயன்படுத்திப் போலிகள் உருவாக்கப்படுவதைத் தடுக்க, ‘ஆப்பிள்’, ‘கூகல்’ நிறுவனங்களைப் போல ‘வாட்ஸ்அப்’பும் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும்.
வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 27) நடைபெற்ற அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது உள்துறை அமைச்சுக்கான துணை அமைச்சர் கோ பெய் மிங் இதனைத் தெரிவித்தார்.
மோசடி முறியடிப்பு அதிகரித்தாலும் தொடரும் கவனம்
சிங்கப்பூரில் மோசடிக்காரர்களுக்கு எதிராகப் பதிலடி தரப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட திரு கோ பெய் மிங், நிலவரம் கடந்த ஆண்டு மேம்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
2024ஆம் ஆண்டைக் காட்டிலும் 2025ஆம் ஆண்டுக்கான மோசடிச் சம்பவங்களால் ஏற்பட்ட இழப்பு கிட்டத்தட்ட 200 மில்லியன் வெள்ளி (அதாவது 18 விழுக்காடு) குறைந்துள்ளது. அத்துடன் சிங்கப்பூர்க் காவல்துறை, தனது பங்காளிகளுடன் ஒன்றிணைந்து 339 மில்லியன் வெள்ளி இழப்புகளைத் தவிர்க்கப் பாதிக்கப்பட்டோருக்கு உதவியதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இருந்தபோதும் நிலவரம் ஆழ்ந்த கவலைக்குரியதாக உள்ளது என்று திரு கோ தெரிவித்தார். 2025இல் மட்டும் 37,000க்கும் அதிகமான மோசடிச் சம்பவங்கள் ஏற்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், அவற்றின் மொத்த இழப்பு 900 மில்லியன் வெள்ளியைக் கடந்ததாகக் குறிப்பிட்டார்.
குறிப்பாக, அரசாங்க அதிகாரிகளைப் போலப் பாவனை செய்யும் மோசடிக்காரர்களின் ஏமாற்றுச் சம்பவங்கள் இரு மடங்காகி 3,000க்கும் மேல் உயர்ந்துள்ளன என்று அவர் கூறினார்.
மெட்டா, ஆப்பிள், கூகல் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக இணையக் குற்றவியல் தீங்குச் செயல் சட்டத்தின்கீழ் (OCHA) நான்கு செயல்பாட்டு உத்தரவுகள் கடந்த ஆண்டு பிறப்பிக்கப்பட்டதையும் திரு கோ சுட்டினார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், சிம் அட்டைகளின் தவறான பயன்பாட்டுக்கு எதிராகவும் தண்டனை வழிமுறைகளை அறிமுகம் செய்யப் பல்வேறு அமைப்புகளை உள்ளடக்கிய தண்டனை ஆலோசனைக் குழுவுடன் உள்துறை அமைச்சு பணியாற்றும் என்றும் அவர் கூறினார்.
பன்முனை அணுகுமுறை
மோசடி நடவடிக்கைகளுக்கு எதிராக இணையப் பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்த அரசாங்கம் இணைந்து செயல்படும் என்பதையும் திரு கோ குறிப்பிட்டார்.
தற்போது நடைமுறையில் உள்ள இணையக் குற்றவியல் தீங்குச் செயல் சட்டங்களில் அடங்கும் கோட்பாடுகளை மேம்படுத்துவது அதில் ஒன்றாகும். பயனாளர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்தக் கடுமையான முறைகளை அறிமுகப்படுத்துவதும், மோசடி பற்றித் தளங்களுக்குப் புகாரளிக்கும்போது அந்தத் தளங்கள் பதில் நடவடிக்கை எடுப்பதற்கான நேர வரம்புகளை விதிப்பதும் இதில் அடங்கும் என்றார் திரு கோ.
இத்தகைய தரவுப் பகிர்வுகளின் நன்மையை முழுமையாகப் பயன்படுத்த உள்துறை அமைச்சின் ஹெச்டிஎக்ஸ் (HTX) எனப்படும் அறிவியல், தொழில்நுட்பக் கட்டமைப்பும் சிங்கப்பூர்க் காவல்துறையும் ‘தேசிய மோசடிப் பட்டியல்’ என்ற தளத்தை உருவாக்கவுள்ளன.
அரசாங்கத்திற்கும் அதன் பங்காளிகளுக்கும் இடையிலான தானியக்க, உடனடிப் பரிமாற்றத்திற்கு இந்தத் தளம் வழிவகுக்கும் என்று அவர் கூறினார்.

