வாகனத்தில் மலேசியா செல்வோர் வரும் புதன்கிழமை (ஜூலை 23) அதிகாலை ஐந்து மணி முதல் பிற்பகல் இரண்டு மணி வரை துவாஸ் இரண்டாம் இணைப்பைப் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
துவாஸ் இரண்டாம் இணைப்பில் அவசரச் சேவைப் பயிற்சி நடைபெறவுள்ளது அதற்குக் காரணம். சிங்கப்பூரின் தேசிய சுற்றுப்புற வாரியம், மலேசியாவின் சுற்றுப்புறப் பிரிவு இரண்டும் மற்ற சில அமைப்புகளுடன் இணைந்து துவாஸ் இரண்டாம் இணைப்பில் ரசாயனக் கசிவுப் பயிற்சியை மேற்கொள்ளவிருக்கின்றன.
சுற்றுப்புறத்துக்கான மலேசிய-சிங்கப்பூர் கூட்டுக் குழுவின்கீழ் வரும் இருதரப்பு ஒத்துழைப்பின் அங்கமாக இந்த ரசாயனக் கசிவுப் பயிற்சி நடத்தப்படுகிறது. பயிற்சி நடக்கும்போது மலேசியாவை நோக்கிய துவாஸ் இணைப்புப் பதையில் உள்ள மூன்று தடங்களும் வாகனப் போக்குவரத்துக்கு மூடப்பட்டிருக்கும் என்று தேசிய சுற்றுப்புற வாரியம் திங்கட்கிழமை (ஜூன் 21) அறிக்கையில் தெரிவித்தது.
பயிற்சி நடக்கும்போது வாகனங்கள், சிங்கப்பூரை நோக்கிய துவாஸ் இணைப்புப் பகுதியில் உள்ள தடங்களில் ஒன்றுக்கு மாற்றிவிடப்படும்.
தங்கள் பயணத்தை முன்னதாகவே திட்டமிடுமாறு தேசிய சுற்றுப்புற வாரியம், வாகன ஓட்டிகளைக் கேட்டுக்கொண்டுள்ளது. சம்பவந்தப்பட்ட சாலைகளில் செயல்படும் போக்குவரத்து வழிகாட்டிகள் காட்டும் வழிகளில் செல்லுமாறும் சிங்கப்பூர் வானொலி ஒலிவழிகளில் போக்குவரத்துத் தகவல்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுமாறும் தேசிய சுற்றப்புற வாரியம் அறிவுரை வழங்கியுள்ளது.