பிரசவ வேதனையில் துடித்த பெண்ணுக்கு பேருதவி புரிந்த அதிகாரிகள்

பிரசவ வேதனையில் துடித்த பெண்ணுக்கு பேருதவி புரிந்த அதிகாரிகள்

1 mins read
34a18717-07eb-492f-877d-bb18ce6a0f27
படம்: KAI LING CHENG/FACEBOOK -

பிரசவத்துக்கு நாள் குறிக்கப்பட்ட இரு வாரங்களுக்கு முன்னரே பனிக்குடம் உடைந்து குழந்தை பெறத் தயாராக இருந்த மலேசியப் பெண்மணி விரைந்து ஜோகூர் செல்ல சிங்கப்பூர் குடிநுழைவு அதிகாரிகள் பேருதவி புரிந்தனர். செங் கை லிங், 29, எனப்படும் அந்தப் பெண்ணுக்குக் குறிக்கப்பட்டது ஏப்ரல் 7ஆம் தேதி.

ஆனால், உட்லண்ட்ஸில் தங்கியிருந்த அவருக்கு மார்ச் 25ஆம் தேதி காலை 7 மணிக்கெல்லாம் பனிக்குடம் உடைந்துவிட்டது. அதனை உணர்ந்து தூக்கத்திலிருந்து விழித்த அவர், ஜோகூர் மருத்துவமனையில் குழந்தை பெறவேண்டும் என்று ஏற்கெனவே வகுத்திருந்த திட்டப்படி தமது கணவருடன் ஜோகூருக்குப் புறப்பட்டார். வலியைத் தாங்கியவாறே உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடிக்குச் சென்றார். அவரது கணவர் ஓங் டெக் சான், 31, தமது மனைவியின் அருகே பதற்றத்துடன் இருப்பதைக் கண்ட சிங்கப்பூர் குடிநுழைவு சோதனைச் சாவடி அதிகாரிகள் நிலைமையை கேட்டறிந்த பின்னர் அவ்விருவருக்கும் உதவ முன்வந்தனர்.

திருவாட்டி செங்கிற்கு உடனடியாக சக்கர நாற்காலி வழங்கினர். வழக்கத்தைவிட அதிகமாக பயணிகள் கூட்டம் காணப்பட்டபோதிலும் அவர்களுக்கு விரைவாக அனுமதி வழங்கப்பட்டது. அங்கிருந்த முதல் உதவிக்குழு அதிகாரிகள் அந்தத் தம்பதியை விரைவாக அழைத்துச் சென்று பேருந்து ஓட்டுநரிடமும் நிலைமையை விளக்கினர். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னரே ஜோகூர் இறங்கிய அந்தப் பெண்ணை அவரது தந்தை இஸ்கந்தர் புத்ரி கொலம்பியா ஆசியா மருத்துவமனையில் சேர்த்தார். மாலை 4.30 மணிக்கு ஆண்குழந்தையை அப்பெண் ஈன்றெடுத்தார்.

குறிப்புச் சொற்கள்