கவ்டெக் அமைப்பால் அரசாங்க ஊழியர்களுக்காக நடத்தப்படும் ‘ஃபர்ஸ்ட் டேட்’ எனும் திருமணம் செய்துகொள்ள விரும்பும் ஆண்களையும் பெண்களையும் இணைக்கும் முன்னோட்டத் திட்டத்தின் வயது வரம்பு தற்போது 45 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, 21 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மட்டுமே சாத்தியமாக இருந்த இந்தச் சேவை, தற்போது 21 முதல் 45 வயது வரையிலான மணமாகாத, கணவனை இழந்த, மனைவியை இழந்த மற்றும் மணமுறிவான அரசாங்க ஊழியர்கள் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செவ்வாய்க்கிழமையன்று (அக்டோபர் 20) தொடங்கிய தற்போதைய சுற்றிற்கான விண்ணப்பப் பதிவு, அக்டோபர் 26ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இத்திட்டத்தில் பங்கேற்போர் தங்களுக்குப் பரிந்துரைக்கப்படும் நபரின் விவரக்குறிப்பு, பொருத்தம் குறித்த புள்ளிவிவரம் மற்றும் தனிப்பட்ட குறிப்பு ஆகியவற்றைப் பார்க்க முடியும். இருப்பினும், புகைப்படங்கள் காண்பிக்கப்பட மாட்டா. பரஸ்பர இணக்கத்துக்குப் பிறகே தொடர்பு விவரங்கள் பகிரப்படும்.
இணை தீர்மானிக்கப்பட்டதும் இரு தரப்புக்கும் குறுஞ்செய்தி அனுப்பிவைக்கப்படும். பரிந்துரைக்கப்பட்டவருடன் தொடர்புகொள்வது குறித்து முடிவெடுக்க மூன்று நாள்கள் அவகாசம் அளிக்கப்படும்.
