தைப்பூசம் வழிபாட்டுக்கான ஒரு தினம் என்பதைத் தாண்டி அதைத் தமது குடும்பத் திருவிழாவாகக் கருதுகிறார் 40 ஆண்டுகளாகத் தொடர்ந்து காவடி சுமக்கும் பக்தர் கதிரேசன்.
தற்போது 58 வயதான இவர், தமது 18வது வயதில் முதன்முதலில் காவடி சுமந்தது நினைவில் பசுமையாக இருப்பதாகச் சொன்னார். சிறியதாகத் தொடங்கிய இவரது காவடி சுமக்கும் விருப்பம் தம் தந்தையின் சொல்லால் குடும்பத்தினர் தொடரும் நீண்ட மரபாகவே மாறியதைச் சுட்டினார் கதிரேசன்.
தந்தை காவடி சுமக்கும் நண்பர்களுக்கு உதவுவதைப் பார்த்து வளர்ந்த கதிரேசனுக்குக் காவடி சுமந்து பார்க்கும் ஆவல் எழுந்தது. தந்தையிடம் கூறியபோது தந்தை கேட்ட முதல் கேள்வி, “எந்தக் காவடியைச் சுமக்கப் போகிறாய்?” என்பதுதான்.
நண்பர்களிடம் இருந்தோ பிறரிடம் இருந்தோ வாங்கிச் சுமக்கலாம் எனும் எண்ணம் இருந்ததாகச் சொன்ன இவரிடம், “காவடி சுமந்தால் சொந்தமாக உன் கைகளால் செய்து சுமக்க வேண்டும். இல்லையெனில் சுமக்கத் தேவையில்லை,” என்று கூறினார் இவரின் தந்தை.
“அந்த நொடி, காவடியை வடிவமைத்து சுமக்க முடிவெடுத்தது, 40 ஆண்டுகளாகத் தொடர்கிறது,” என்றார் கதிரேசன்.
“பொதுவாக, தமிழர்கள் தீபாவளியை விமரிசையாகக் கொண்டாடுவர். எங்களுக்கு தைப்பூசம், தீபாவளியைவிட வெகு விமரிசையான பண்டிகை. என் மகள் ஆஸ்திரேலியாவிலிருந்து ஆண்டுதோறும் தைப்பூசத்திற்குத் தவறாமல் வந்துவிடுவார். ஒவ்வோர் ஆண்டும் என்னுடைய தாய், மனைவி, மகள், மகன் எனக் குடும்பமாக இணைந்து காவடியை அலங்கரித்து சுமந்து சென்று திரும்பி வருவது வரை ஒன்றாக இருப்போம்,” என்று சிரிப்புடன் பகிர்ந்தார் கதிரேசன்.
“அந்த உற்சாகம் ஈடு இணையற்றது,” என்றும் சொன்னார்.
முதல் பத்தாண்டுகள் சங்கிலிக் காவடியில் தொடங்கி, அடுத்து அலகுக் காவடி, ரதக் காவடி உள்ளிட்டவற்றைச் சுமந்ததாகவும், கடந்த 30 ஆண்டுகளாக அரிகந்தம் காவடி சுமந்து வருவதாகத் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
தாம் தற்காலிகமாகப் பணியாற்றிய நிறுவனத்தில் முதல் காவடி செய்தபோது தமது தந்தை துணை நின்றதும், வெற்றிகரமாக முதன்முறை காவடி சுமந்துசென்று முடித்தது பெரும் ஆனந்தத்தை அளித்ததாகவும் நினைவுகூர்ந்தார் கதிரேசன்.
“எனக்குத் தனியாக எதுவும் வேண்டுதல் இல்லை,” என்று சொன்ன கதிரேசன், தம்மையும் தம் குடும்பத்தினரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும் முருகப்பெருமானுக்கு நன்றி செலுத்துவதற்கே காவடி சுமப்பதாகக் கூறினார்.
“முருகு என்றாலே அழகு. அவருக்கு ஏற்றவாறு அழகிய நுணுக்கங்களுடன், நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட காவடியில், அவருக்குப் பிடித்தமான மயில், வேல் உள்ளிட்டவற்றுடன் காவடி சுமந்து சென்றால் முருகனுக்குப் பிடிக்கும். அவர் மகிழ்வார் என்பது எனது நம்பிக்கை,” என்றார் கதிரேசன்.
“ஏறத்தாழ 200 முதல் 250 சிறு சிறு பொருள்களால் ஆன காவடியைப் பக்தர்கள் சுமந்து செல்வது வழக்கம். அது 60 கிலோ எடை இருக்கும். மழை வந்துவிட்டால், மயில் இறகுகள் உள்ளிட்ட பொருள்கள் நனைந்து தட்டுகளில் நீர் நின்று இன்னும் கனமாக்கும். எனவே, மழை வராமல் இருக்க வேண்டிக்கொள்வோம்,” என்றார்.
ஒவ்வொரு முறை சுமக்கும்போதும் பயமும் பக்தியும் நெகிழ்ச்சியும் உற்சாகமும் கலந்த உணர்வுதான் இருக்கும் என்று சொன்ன அவர், முடிக்கும் அந்தத் தருணம் தரும் ஆத்ம திருப்திக்கு எல்லை இல்லை எனச் சொன்னார்.
தொடர்ந்து, “ஸ்ரீஸ்ரீநிவாசப் பெருமாள் கோவில் முதல் அருள்மிகு தெண்டாயுதபாணி கோவில் வரை பக்தர்கள் நடந்து செல்வது ஒரு புனிதமான பாதை. அதை அனைவரும் உணர்ந்து நடந்துகொள்ள வேண்டும். காவடி சுமப்போருக்கு இடையூறு ஏற்படுத்தாமலும் அப்பாதையின் புனிதத் தன்மைக்கு ஊறு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடாமலும் இருக்க வேண்டும்,” என்று கேட்டுக்கொண்டார் கதிரேசன். நமது கலாசாரத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு உள்ளது என்பதை உணர வேண்டும் எனவும் வலியுறுத்தினார் அவர்.
“என் நண்பர்கள், குடும்பத்தினருடன் ஏதேனும் கோபம், பகை இருந்தால்கூட, அவற்றை மறந்து காவடி சுமக்கும் நாளன்று உதவிக்கு ஓடோடி வந்துவிடுவர். இது நம் கலாசாரத்தையும் குடும்ப உறவுகளையும் கட்டிக்காக்கும் ஒரு நாள். இது அடுத்த தலைமுறைக்கும் கொண்டு சேர்க்கப்பட வேண்டும்,” என்று தெரிவித்தார்.
தம் மகன் பங்குனி உத்திரத்தன்று காவடி சுமப்பதாகவும், எதிர்காலத்தில் அவரும் காவடி செய்து சுமப்பதைப் பார்க்க ஆவலாக உள்ளதாகவும் சொன்னார் கதிரேசன்.
தமது காவடியை மகனுக்கு அளிக்க விரும்பும் தினேஷ்
மிகச் சிறுவயதிலேயே தம் தந்தையிடம் சென்று காவடி தூக்க வேண்டும் எனக் கேட்டு, 16வது வயதிலிருந்து காவடி சுமந்து வருகிறார் தினேஷ் குமார்.
தந்தையுடன் தைப்பூசத் திருநாளைப் பார்த்து வரும் அவர், ஒவ்வொரு வகையான காவடி, அதன் அழகு, அதைச் சுமக்கும் முறை, அதற்குப் பின்னால் உள்ள பொருள் என அனைத்தும் தம்மை ஈர்த்ததாகக் கூறினார்.
கடந்த 20 ஆண்டுகளாகக் காவடி சுமந்து வரும் இவர், “பால் காவடி, சங்கிலிக் காவடி, அலகுக் காவடி சுமந்துள்ளேன். இந்த ஆண்டு முதன்முறையாக அரிகந்தம் காவடியை சுமக்க உள்ளேன். இது ஒரு வளர்ச்சி போன்றது,” என்றார்.
“கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பே, எனது 40 வயதில் அரிகந்தம் சுமக்க வேண்டும் எனும் எண்ணம் கொண்டேன். அது நிறைவேற உள்ளது,” என்றும் சிரிப்புடன் சொன்னார்.
முதன்முறை இக்காவடியைச் சுமக்க இருப்பதால் பயமும் பக்தியும் கலந்திருப்பதாகச் சொன்னார்.
ஆண்டுதோறும் காவடியை வடிவமைக்க ஒரு வார காலம் எடுத்துக்கொள்வதாகச் சொன்னார் அவர். “ஒவ்வோர் அலங்காரப் பொருளையும் கவனமாகத் தேர்ந்தெடுத்து, நுணுக்கமாக வைத்து காவடி கட்டும் அந்தச் செயல்முறையே அந்த ஆண்டுக்கான உற்சாகத்தைக் கொண்டு வந்துவிடும்,” என்றார்.
ஒவ்வொரு காவடியின் எடையும் மாறுபடும் என்றும் தாம் சுமக்கும் காவடி ஏறத்தாழ 50 முதல் 60 கிலோ எடை இருக்கும் என்றும் பகிர்ந்தார் தினேஷ். மூவாயிரம் வெள்ளி முதல் முப்பதாயிரம் வெள்ளி வரையுள்ள காவடிகள் இருப்பதாகவும் சொன்னார் அவர்.
கலைக் கண்ணோட்டமும் தொழில்நுட்பமும் காவடி வடிவமைப்பில் துணை நிற்பதாகக் கூறும் இவர், காவடியின் அமைப்பு, வடிவம், எடை அனைத்தும் சுமப்போருக்கு ஏற்றபடி அமைவது அவசியமென்றார். குறிப்பாக, அலகுக் காவடியில் அமையும் கம்பிகள் கூர்மையாகத் தீட்டப்பட்டிருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். காவடி வடிவமைப்பில் சிறு பிழை நேர்ந்தாலும் சுமக்கும் நாளன்று சிரமம் ஏற்படுத்தும் என்பதால் அதில் மிகக் கவனமாக இருக்க வேண்டுமெனச் சுட்டிக்காட்டினார்.
காவடி சுமப்பவர்கள் நடனம் ஆடுவதற்குச் சில அர்த்தம் இருப்பதாகக் கூறினார் தினேஷ். “காவடி சுமக்கும்போது மொத்த எடையும் இரு தோள்களில் இறங்கும். நேரம் ஆக ஆக வலி வரலாம். அதனைத் தவிர்க்கவும் கவனத்தைத் திசை திருப்பவும் நடனமாடுகிறார்கள்,” எனச் சொன்னார்.
“காவடியை வடிவமைக்கும் நாளில் இருந்து சுமக்கும் நாள் வரை பக்திமயமாக இருக்கும். மனது முருகப்பெருமானை மட்டுமே நினைத்திருக்கும். அது சிலிர்ப்பான ஓர் அனுபவமாக இருக்கும்,” என்று தெரிவித்தார்.
தமது பெற்றோர் வீட்டிலிருந்து காவடி வழிபாடு செய்து புறப்படுவது வழக்கம் என்றும் அந்நாளில் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவளிப்பது, பாரத்தை மறக்கச் செய்யும் என்றும் சொன்னார்.
“காவடி சுமக்கும் பயணத்தில் சில இடங்களில் அகலம் குறைவாக இருக்கும். அப்போது தெரியாமல் யாரேனும் இடித்துவிட்டால் அலகு இன்னும் ஆழமாக உள்செல்லும். அது சிரமமான அனுபவம். ஆனால், ஆடிப்பாடியபடி நடப்பது அதனை மறக்கச் செய்யும்,” என்று கூறினார்.
காவடி சுமக்கும் செயல்பாடு உடல் வலிமையை மட்டுமன்றி மன வலிமையைச் சோதிக்கும் ஒன்று எனச் சொன்னார்.
“என் உடலில் வலு உள்ளவரை காவடி சுமந்து கொண்டிருப்பேன். இது என் நம்பிக்கையின் வெளிப்பாடு,” என்று சொன்னார். தமது காவடியைத் தம் மகனுக்குக் கொடுத்து, அதனை நிலையான ஒன்றாக்க வேண்டும் என விரும்புகிறார் தினேஷ்.
“இணையவழி முன்பதிவில் உள்ள சிரமம், எந்த நேரத்தில் சுமக்க வேண்டும் எனும் நேரம் கிடைப்பதில் உள்ள சிரமம் உள்ளிட்டவை காவடி சுமக்கும் அனுபவத்தைக் கடினமாக்குகின்றன. சில நிர்வாக வழிமுறைகள் மேம்படுத்தப்பட்டால் சிறப்பாக இருக்கும். அது தைப்பூச நாளை இன்னும் மகிழ்ச்சியானதாக்கும்,” என்று கேட்டுக்கொண்டார்.
“காவடி சுமக்கும்போது பக்திப் பாடல்கள், பஜனைகள் இருப்பது சூழலை ஆன்மிக உணர்வில் ஆழ்த்தும். அதனைப் பாதிக்கும் விதமாக அந்த இடத்துக்குப் பொருந்தாத கருவிகள் இசைப்பதை விட பாரம்பரிய இசைக் கருவிகள் வாசித்தால் காவடி சுமப்போருக்கு உதவும்,” என்றார். மேலும், “இந்த நடைமுறைகள் பல்வேறு ஊடகங்கள் வழி அனைவருக்கும் போய்ச் சேரும். அப்போது நம் சமூகம் குறித்த சிறந்தவற்றை வெளிக்கொணரும் விதமாக அனைவரும் நடந்துகொள்ள வேண்டும்,” என்றும் கேட்டுக் கொண்டார் தினேஷ்.