தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புக்கிட் பாஞ்சாங்கில் நான்காவது துடிப்புடன் மூப்படைதல் நிலையம்

2 mins read
6f311fd9-b09c-4f45-bd30-5b01a9e8808b
ஃபாஜாரில் அமைந்துள்ள ஃபெய் யு துடிப்புடன் மூப்படைதல் நிலையத்தில் வியாழக்கிழமை (பிப்ரவரி 13) காலை இடம்பெற்ற உடற்பயிற்சி நிகழ்ச்சியில் புக்கிட் பாஞ்சாங் நாடாளுமன்ற உறுப்பினர் லியாங் எங் ஹுவாவும் சுகாதார துணை அமைச்சர் ரஹாயு மஹ்ஸாமும் பங்கேற்றனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

புக்கிட் பாஞ்சாங்கில் மூத்த குடிமக்களுக்கான நான்காவது துடிப்புடன் மூப்படைதல் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

புக்கிட் பாஞ்சாங் வட்டாரத்தில் மூன்றாவது துடிப்புடன் மூப்படைதல் நிலையத்தை வியாழக்கிழமை (பிப்ரவரி 13) அதிகாரபூர்வமாகத் திறந்துவைத்துப் பேசியபோது, அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் லியாங் எங் ஹுவா இதனைத் தெரிவித்தார்.

சுகாதார துணை அமைச்சர் ரஹாயு மஹ்ஸாமும் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

பங்கிட் சந்தையில் நான்காவது துடிப்புடன் மூப்படைதல் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. அத்துடன், 422 ஃபாஜார் ரோடு எனும் முகவரியில் முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றும் புதிதாகத் திறக்கப்பட உள்ளது.

புக்கிட் பாஞ்சாங்கின் மூன்றாவது துடிப்புடன் மூப்படைதல் நிலையமானது 2024 ஏப்ரலில் தனது செயல்பாடுகளைத் தொடங்கியது. அந்நிலையம் இதுவரை 600க்கும் மேற்பட்ட மூத்த குடிமக்களைத் தனது நடவடிக்கைகளில் ஈடுபடுத்தியுள்ளது.

அந்நிலையம் தனது நடவடிக்கைகளில் 1,300 மூத்த குடிமக்கள்வரை ஈடுபாடுகொள்ளச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இயற்கை அழகு மிகுந்த சூழலில் அவர்கள் உடற்பயிற்சி நடவடிக்கைகளில் அல்லது கலைசார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.

406 ஃபாஜார் ரோடு என்ற முகவரியில் அமைந்துள்ள அந்நிலையத்தை ஃபெய் யு சமூகச் சேவை நிறுவனம் நடத்தி வருகிறது.

குடியிருப்புப் பேட்டை, குடிமக்கள் என இருவகைகளிலும் புக்கிட் பாஞ்சாங் வட்டாரம் மூப்படைந்து வருகிறது.

அங்குள்ள குடியிருப்புகளில் பல கட்டப்பட்டு கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாகிவிட்டன. அதுபோல், அவ்வட்டாரவாசிகளில் ஐவரில் ஒருவர் 60 வயதைக் கடந்தவர்.

இத்தகைய சூழலில், அவ்வட்டாரத்தின் உள்கட்டமைப்பிற்குப் புதுப்பொலிவூட்டும் பணிகளும் மூத்த குடிமக்கள் துடிப்புடன் மூப்படைய உதவும் நடவடிக்கைகளும் இடம்பெற்று வருவதாக திரு லியாங் குறிப்பிட்டார்.

“முதியவர்கள் செழிப்புறவும் சமுதாயத்தில் துடிப்புடன் பங்காற்றவும் போதிய வெளிகளைத் தொடர்ந்து ஏற்படுத்தித் தருவது முக்கியம். நம்முடைய மூத்த குடிமக்கள் நன்றாக வாழ்வதையும் அவர்கள் மதிக்கப்படுவதையும் உறுதிசெய்வதில் நமக்குள்ள கூட்டுப் பங்களிப்பை எடுத்துக்காட்டுவதாக இத்தகைய துடிப்புடன் மூப்படைதல் நிலையங்கள் அமைந்துள்ளன,” என்று திரு லியாங் கூறினார்.

சிங்கப்பூரில் 2024 நவம்பர் நிலவரப்படி மொத்தம் 214 துடிப்புடன் மூப்படைதல் நிலையங்கள் அமைந்துள்ள நிலையில், 2025ஆம் ஆண்டிற்குள் அந்த எண்ணிக்கையை 220ஆக உயர்த்த அரசாங்கம் இலக்கு கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்