இணையம் மூலம் சுற்றுப்பயணப் பதிவுகளை ஏற்கும் தளமான அகோடோ, சிங்கப்பூரில் உள்ள அதன் ஊழியர்களில் 50 பேரை ஆட்குறைப்பு செய்திருப்பதாக ‘பிஸ்னஸ் டைம்ஸ்’ நாளிதழ் புதன்கிழமை (செப்டம்பர் 17) தெரிவித்தது.
சிங்கப்பூர், ஷாங்காய், புடாபெஸ்ட் ஆகிய இடங்களில் உள்ள வாடிக்கையாளர் அனுபவக் குழுவைச் சேர்ந்த அனைத்து ஊழியர்களும் ஆட்குறைப்பு செய்யப்படுவர் என்று ஆகஸ்ட் 4ஆம் தேதியன்று நடைபெற்ற மெய்நிகர் கூட்டம் வாயிலாகத் தெரிவிக்கப்பட்டது.
செலவு, ஆட்சேர்ப்பு தொடர்பான சவால்கள் ஆகியவற்றை ஆட்குறைப்புக்குக் காரணங்களாக அகோடாவின் நிர்வாகம் சுட்டியது.
ஆட்குறைப்பு குறித்து மனிதவள அமைச்சு, நியாயமான மற்றும் முற்போக்கு வேலை வாய்ப்பு அணுகுமுறைக்கான முத்தரப்புப் பங்காளித்துவம் போன்ற அரசாங்க அமைப்புகள், அரசு ஆணை பெற்ற அமைப்புகள், தொழிற்சங்கங்கள் ஆகியவற்றிடம் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் தெரிவிக்கக்கூடாது என்று ஆட்குறைப்பு செய்யப்பட்டோருக்குக் கொடுக்கப்பட்ட ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்ததாக பிஸ்னஸ் டைம்ஸ் தெரிவித்தது.
அவ்வாறு செய்பவர்களுக்கு ஆட்குறைப்பு அனுகூலங்கள் கிடைக்காது என்று ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.