தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கரிம ஊக்கப் புள்ளி தொடர்பில் சிங்கப்பூர் - சிலி இடையே உடன்பாடு

1 mins read
fca08d90-983e-4427-b5ef-15fe5ad36eb2
சுற்றுப்புற, நீடித்த நிலைத்தன்மை அமைச்சர் கிரேஸ் ஃபூவும் (வலது) சிலி வெளியுறவுத்துறை முதன்மை அமைச்சர் அல்பர்ட்டோ வான் கிலவெரனும் திங்கட்கிழமையன்று (ஏப்ரல் 7) கரிம ஊக்கப் புள்ளி உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.  - படம்: வர்த்தக, தொழில் அமைச்சு

தென்னமெரிக்க நாடான சிலியிடமிருந்து சிங்கப்பூர் கரிம ஊக்கப் புள்ளிகளை வாங்கவிருக்கிறது. அதற்கான உடன்பாடு திங்கட்கிழமை (ஏப்ரல் 7) கையெழுத்தானது.

பூட்டான், கானா, பாப்புவா நியூ கினி, பெரு ஆகிய நாடுகளுடன் சிங்கப்பூர் ஏற்கெனவே இத்தகைய ஒப்பந்தத்தைச் செய்துகொண்டுள்ளது.

தேசிய அளவிலான கரியமிலவாயு வெளியேற்ற அளவைக் குறைக்க கரிம ஊக்கப் புள்ளிகள் உதவுகின்றன. அதுதொடர்பான பாரிஸ் உடன்பாட்டின்படி, உள்நாட்டுப் பருவநிலை இலக்குகளை எட்டுவதற்கு நாடுகள் மற்ற நாடுகளிடமிருந்து அல்லது வட்டாரங்களிடமிருந்து கரிம ஊக்கப் புள்ளிகளை வாங்கலாம்.

கடந்த 2021ஆம் ஆண்டுமுதல் 2030ஆம் ஆண்டுவரையிலும் ஆண்டிற்கு 2.5 மில்லியன் டன் கரியமிலவாயு வெளியேற்றத்தைக் குறைப்பதற்கு உயர்தரக் கரிம ஊக்கப் புள்ளிகளைச் சிங்கப்பூர் பயன்படுத்தும் என முன்னதாக மதிப்பிடப்பட்டிருந்தது.

ஒரு கரிம ஊக்கப் புள்ளியானது, வளிமண்டலத்திலிருந்து நீக்கப்படும் அல்லது வெளியேறாமல் தடுக்கப்படும் ஒரு டன் கரியமிலவாயுவைக் குறிக்கிறது.

இந்நிலையில், சுற்றுப்புற, நீடித்த நிலைத்தன்மை அமைச்சர் கிரேஸ் ஃபூவும் சிலி வெளியுறவுத்துறை முதன்மை அமைச்சர் அல்பர்ட்டோ வான் கிலவெரனும் திங்கட்கிழமையன்று உடன்பாட்டில் கையெழுத்திட்டனர். சிலி அமைச்சர் கிலவெரன் ஏப்ரல் 6 முதல் 8 வரை மூன்றுநாள் அதிகாரத்துவப் பயணமாகச் சிங்கப்பூர் வந்துள்ளார்.

கரிம ஊக்கப் புள்ளி தொடர்பில் மலேசியா, கம்போடியா, கொலம்பியா உள்ளிட்ட மேலும் 15க்கும் மேற்பட்ட நாடுகளுடன் சிங்கப்பூர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

குறிப்புச் சொற்கள்