வியட்னாமிலிருந்து சிங்கப்பூருக்கும் மலேசியாவிற்கும் எரிசக்தி ஏற்றுமதி செய்ய உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
கூட்டு மேம்பாட்டு உடன்பாடு பரிமாற்ற நிகழ்வு ஆசியான் உச்சநிலை மாநாட்டின் அங்கமாகத் திங்கட்கிழமை மூன்று நாட்டுப் பிரதமர்கள் முன்னிலையில் நடந்தது.
வியட்னாமின் ‘பிடிஎஸ்சி’ எனும் பெட்ரோவியட்னாம் டெக்னிகல் சர்விசஸ் கார்ப்பரேஷன், மலேசியாவின் பெட்ரோனாஸ் நிறுவனமும் டெனாகா நேஷனல் பெர்ஹாட் நிறுவனமும் இணைந்த ‘மை எனர்ஜி கன்சோர்ட்டியம்’, சிங்கப்பூரின் செம்ப்கார்ப் யுட்டிலிட்டீஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகியவை இணைந்து இந்த உடன்பாட்டை எட்டியுள்ளன.
குறைந்த கரிம வெளியேற்றத்துடன் 6 கிகாவாட் மின்சாரத்தை 2035ஆம் ஆண்டுக்குள் இறக்குமதி செய்வது சிங்கப்பூரின் இலக்கு. இது, நாட்டின் எரிசக்தி தேவையில் மூன்றில் ஒரு பங்கு.
பகிரப்பட்ட உள்கட்டமைப்பு மூலமும் வலுவான பங்காளித்துவம் மூலமும் குறைந்த கரிம எரிசக்திக்கு மாறவிரும்பும் ஆசியானின் கடப்பாட்டுக்கு ஆதரவாக இருப்போம் என்று செம்ப்கார்ப் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் குழுமத் தலைமை நிர்வாக அதிகாரி வோங் கிம் யின் தெரிவித்தார்.
ஆசியான் எரிசக்தி கட்டமைப்பு இலக்கில் வலுவான கடப்பாட்டை மலேசியா கொண்டுள்ளதாகவும் இந்த முத்தரப்பு பங்காளித்துவம் நாடுகளுக்கிடையிலான பசுமைக் கட்டமைப்பை மேம்படுத்துவதில் முதல் படி என்றும் ‘பெட்ரோனாஸ்’, ‘டெனாகா’ நிறுவனங்களின் தலைவர்கள் முகம்மது தவ்ஃபிக், மெகாட் ஜலாலுதீன் மெகாட் ஹஸான் தெரிவித்தனர்.
வட்டாரத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மையமாக உருவெடுக்க உத்திபூர்வ சிந்தனையை வியட்னாம் கொண்டுள்ளதாகவும் புதிய பொருளியல் வாய்ப்புகளை முடுக்கிவிடுவதுடன் நீடித்த நிலைத்தன்மைமிக்க வளர்ச்சியையும் தரமான வேலைவாய்ப்பையும் இந்தத் திட்டம் வழங்கும் என்றும் வியட்னாம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கடலுக்கு அடியில் இடப்படும் கம்பிவடங்கள் மூலம் எரிசக்தி விநியோகிக்கப்படும் என்றும் வணிகரீதியான திட்டங்கள் விரைவில் கலந்துரையாடப்படும் என்றும் மலேசிய துணைப் பிரதமரும் எரிசக்தி உருமாற்ற, நீர்வள உருமாற்ற அமைச்சருமான ஃபடில்லா யூசுஃப் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை வியட்னாமிலிருந்து ஒரு பகுதியை சிங்கப்பூருக்கும் மற்றொரு பகுதியை மலேசியாவிற்கும் விநியோகிப்பது இதன் நோக்கம் என்றார் அவர்.