புருணை-சிங்கப்பூர் வேளாண்-தொழில்நுட்ப உணவு மண்டலத்தை அமைப்பதற்கான சாத்தியம் தொடர்பில் நீடித்த நிலைத்தன்மை , சுற்றுப்புற அமைச்சும் புருணையின் நிதி, பொருளியல் அமைச்சும் கூட்டாக ஆய்வு மேற்கொள்ளவிருக்கின்றன.
இரு நாடுகளின் உணவு விநியோக மீள்திறனை மேம்படுத்த அந்த உணவு மண்டலம் இலக்கு கொண்டுள்ளது என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு ஒரு ஃபேஸ்புக் பதிவு வழியாகத் தெரிவித்துள்ளது.
அத்துடன், முதலீடு, உற்பத்தி, ஏற்றுமதி தொடர்பில் வட்டார, அனைத்துலக வேளாண்-உணவு நிறுவனங்களை ஈர்க்கும் வகையில் ஒருங்கிணைந்த சூழலையும் அது ஏற்படுத்தித் தரும்.
மேலும், அந்த உணவு மண்டலம் வேளாண்-தொழில்நுட்பப் புத்தாக்கத்தை ஊக்குவிக்கும் என்றும் நீடித்த நிலைத்தன்மை, தொழில்நுட்ப அடிப்படையிலான வேளாண்-உணவு உற்பத்தியில் புருணையையும் சிங்கப்பூரையும் வட்டார அளவில் முன்னணி நாடுகளாக நிலைநிறுத்தும் என்றும் புருணை நிதி, பொருளியல் அமைச்சு ஓர் அறிக்கை வழியாகத் தெரிவித்துள்ளது.
இருநாட்டு அரசாங்கங்களின் முக்கிய அமைப்புகளும் தனியார் துறையும் அந்தக் கூட்டாய்வில் பங்குபெறும்.

