‘ஏஐ’ மோகம்; சிங்கப்பூர் பகுதி மின்கடத்தி நிறுவனங்கள் அமெரிக்காவில் விரிவாக்கம்

‘ஏஐ’ மோகம்; சிங்கப்பூர் பகுதி மின்கடத்தி நிறுவனங்கள் அமெரிக்காவில் விரிவாக்கம்

2 mins read
1e12bf4a-2f83-4a1b-af5c-485f8ba807c1
வி‌ஷன்டெக் நிறுவனத்தில் பணியில் ஈடுபடும் பொறியாளர். - படம்: வி‌ஷன்டெக்
Google News Preferred Icon

உலகில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) முறைகளில் பயன்படுத்தப்படும் அதிநவீன கணினி நுண்சில்லுகளுக்கான தேவை பெரிதும் அதிகரித்துவருகிறது.

அதற்கு ஈடுகொடுக்க சிங்கப்பூர் பகுதி மின்கடத்தி நிறுவனங்கள் வேகமாக அமெரிக்காவில் தங்களை விரிவுபடுத்திக்கொண்டுவருகின்றன. அதற்கு ஏதுவாக அந்நிறுவனங்கள் வசதிகளை அதிகரித்துக்கொள்வதுடன் தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றன.

எக்சால் டெக்னாலஜிஸ்

அந்த வகையில், பகுதி மின்கடத்தித் துறை நிறுவனமான எக்சால் டெக்னாலஜிஸ் அமெரிக்காவில் புதிதாகக் கிளை திறக்க எண்ணம் கொண்டுள்ளது. அதோடு, அமெரிக்காவில் பணியாற்றும் அதன் ஊழியர்களின் எண்ணிக்கையை இவ்வாண்டிறுதிக்குள் இரட்டிப்பாக்கத் திட்டமிட்டுள்ளது.

சிங்கப்பூர் நிறுவனமான எக்சால் டெக்னாலஜிஸ் தற்போது காணப்படும் செயற்கை நுண்ணறிவு மோகத்தைச் சாதகமாக்கிக்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவில் முதலீட்டு மற்றும் பொருளியல் வளர்ச்சியில் செயற்கை நுண்ணறிவுத் துறையின் வளர்ச்சி முக்கியப் பங்கு வகிக்கிறது.

மற்ற நிறுவனங்கள்

மற்ற சிங்கப்பூர் பகுதி மின்கடத்தி நிறுவனங்களும் அமெரிக்காவில் தங்களை விரிவுபடுத்திக்கொண்டுவருகின்றன. ‘ஜென்ஏஐ’ எனப்படும் ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவு, உயர்தர கணினிச் செயல்முறை ஆகியவற்றினால் எழுந்துள்ள தேவையைச் சாதகமாக்கிக்கொள்ள அவை எண்ணம் கொண்டுள்ளன.

அத்தகைய நிறுவனங்களில் ஒன்றான வி‌ஷன்டெக் வழங்கும் சேவைகளுக்கு அதிக வரவேற்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனம், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவின் எல் டொராடோ ஹில்ஸ் பகுதியில் கிளையைத் திறந்தது.

அதேபோல், பகுதி மின்கடத்திகளைச் சோதனையிடுவதற்கான சாதனங்களை உற்பத்தி செய்யும் ஏஇஎம், கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள கார்ல்ஸ்பாட் நகரில் விற்பனை, ஆய்வு, மேம்பாட்டு நிலையத்தை அமைத்துள்ளது. அமெரிக்காவில் உள்ள தங்களின் வாடிக்கையாளர்களுக்கு அருகில் இருக்க அந்நிறுவனம் கலிஃபோர்னியாவில் நிலையத்தை அமைத்துள்ளது.

அமெரிக்காவின் மாபெரும் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான இன்டெல், பலகாலமாக ஏஇஎம்மின் வாடிக்கையாளராக இருந்துவருகிறது.

சவால்கள்

அமெரிக்கச் சந்தையில் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தாலும் அதிகச் செயல்பாட்டுச் செலவு, திறனாளர்களை வேலைக்கு எடுப்பது போன்ற சவால்களை சிங்கப்பூர் பகுதி மின்கடத்தி நிறுவனங்கள் தொடர்ந்து எதிர்நோக்கிவருகின்றன. அதேவேளை, அமெரிக்கச் சந்தைக்குள் நுழைவது சவாலானதாக இருந்தாலும் ஒரு நிறுவனம் அங்குக் கால் ஊன்றியபின் தடைகள் வாய்ப்புகளாக உருவெடுக்கும் என்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கூறுகின்றன.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்பகுதி மின்கடத்திஅமெரிக்காநிறுவனம்வர்த்தகம்