சிங்கப்பூர் முன்னணி நிதி நடுவமாகத் திகழ்வதை வலுப்படுத்துவதற்குச் செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பம் முக்கியம் என்று தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ கூறியிருக்கிறார். வளர்ச்சிகண்டுவரும் வட்டாரத்தில் நிறுவனங்கள் சேவைகளை விரிவுபடுத்த முயலும் வேளையில் அவரின் கருத்து வந்துள்ளது.
வேலை நடைமுறைகளுக்குச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. அதே நேரம் தொழில்நுட்பத்துடன் வரக்கூடிய ஆபத்துகளுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து வலுப்படுத்துவதும் அவசியம் என்றார் திருமதி டியோ. திங்கட்கிழமை (அக்டோபர் 6) செய்தியாளர்களுக்கு அளித்த நேர்காணலில் அவர் அதனைத் தெரிவித்தார்.
ஏஐ செயல்முறைகளால் பெரிய தவறுகள் நேரக்கூடும். அவற்றால் பாரபட்சமான மதிப்பீடுகளும் நடைமுறைகளும் உருவாகக்கூடும். அத்தகைய ஆபத்துகள் நிதிச் சேவைத் துறையில் ஏஐ பயன்பாட்டினால் மட்டும் வருவதில்லை என்றார் திருமதி டியோ. நிறுவனங்கள் அவற்றைப் பற்றி விழிப்புடன் இருப்பதைச் சிங்கப்பூர் உறுதிசெய்வதாக அவர் சொன்னார்.
அண்மை ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட நிர்வாகக் கட்டமைப்புகளையும் மென்பொருள் சாதனங்களையும் அமைச்சர் டியோ குறிப்பிட்டார். மூன்ஷாட் திட்டத்தை (Project Moonshot) அவர் சுட்டினார். திட்டம் சென்ற ஆண்டு (2024) தொடங்கப்பட்டது. ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதால் வரக்கூடிய பாதுகாப்புப் பிரச்சினைகளைக் களைவதற்கு அது செயலிகளை உருவாக்குவோரை ஊக்குவிக்கிறது.
பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதில் அரசாங்கத்துடன் நிறுவனங்களும் தொடர்ந்து இணைந்து செயல்படுவதாகத் திருமதி டியோ சொன்னார்.
பினாங்கு ரோட்டில் உள்ள யுபிஎஸ் அலுவலத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். 2024ல் தொடங்கப்பட்ட வங்கியின் ஏஐ, உருவாக்க ஆலையை அமைச்சர் டியோ திங்கட்கிழமை பார்வையிட்டார்.