மூளையில் ஏற்படும் ரத்தக்கசிவை ஆறு நிமிடங்களில் கண்டறியக்கூடிய புதிய செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைச் (ஏஐ) சிங்கப்பூர் பொது மருத்துவமனை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளது.
அவசரநிலைப் பாதிப்புகளுக்குக் கதிரியக்க நிபுணர்கள் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரக் கால அளவைவிட இது ஆக விரைவானதாகும்.
‘ஐஸ்கிரீன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள அந்தச் செயற்கை நுண்ணறிவு மாதிரி, தலையின் ஊடுகதிர் பரிசோதனைகளை ஆய்வு செய்து, மூளையில் ரத்தக்கசிவு உள்ள இடங்களையோ அல்லது நோயாளிக்குப் பெரும்பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ரத்தக்கசிவுப் பகுதிகளையோ வெள்ளைப் புள்ளிகள் மூலம் உடனடியாக அடையாளம் காட்டுகிறது.
கடுமையான ரத்தக்கசிவுப் பாதிப்பு கொண்ட நோயாளிகளுக்கு அதனை நிறுத்த உடனடியாக அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.
செயற்கை நுண்ணறிவு மாதிரி ரத்தக்கசிவை உறுதிசெய்தவுடன், அந்தத் துறையின் நரம்பியல் கதிரியக்க நிபுணருக்கும் நோயாளியின் மருத்துவருக்கும் உடனடியாகக் குறுந்தகவல் அனுப்பும் எனச் சிங்கப்பூர் பொது மருத்துவமனை, தேசிய நரம்பியல் கழகத்தின் நரம்பியல் கதிரியக்கத் துறை மூத்த மருத்துவ ஆலோசகர் சரத் குமார் சனமந்திரா கூறினார்.
இது, மருத்துவ உதவி உடனடியாகத் தேவைப்படும் நோயாளியின் செயற்கை நுண்ணறிவு முடிவுகளை முன்னுரிமை அடிப்படையில் பரிசீலிக்க நரம்பியல் கதிரியக்க நிபுணருக்கு நினைவூட்டுகிறது.
மூளையில் ரத்தக்கசிவு இருப்பது உறுதிசெய்யப்பட்டால், கதிரியக்க நிபுணர் உடனடியாக நோயாளியைக் கவனிக்கும் மருத்துவருக்கு அறிக்கை சமர்ப்பிப்பார்.
2025ஆம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட 3,475 தலைப் பரிசோதனைகளின் தரவுகளின்படி, ‘ஐஸ்கிரீன்’ அமைப்பின் உணர்திறன் 93.1 விழுக்காடாக உள்ளது.
மேலும், ‘ஐஸ்கிரீன்’ பயன்பாட்டால் அறிக்கை அளிக்க ஒரு மணி நேரத்திற்கு மேல் தாமதமான சம்பவங்களின் விகிதம் 14.6 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாகக் குறைந்துள்ளது.
உள்ளூர் தொழில்நுட்ப நிறுவனமான ‘அயோட்டா மெட்டெக்’ , 2019ஆம் ஆண்டிலிருந்து தேசிய நரம்பியல் கழகம், சிங்கப்பூர் பொது மருத்துவமனை ஆகியவற்றுடன் இணைந்து இந்தச் செயற்கை நுண்ணறிவு மாதிரியை உருவாக்கியுள்ளது.
