ஹெல்தியர் எஸ்ஜி திட்டத்தின் அடுத்த கட்டத்தில் மருத்துவர்கள் நோய் அபாயத்தைக் கணிக்க செயற்கை நுண்ணறிவு உதவக்கூடும்.
முன்கணிப்பு செயற்கை நுண்ணறிவு (Predictive artificial intelligence), ஒருவருக்கு நோய் ஏற்படக்கூடிய அபாயத்தைப் பல ஆண்டுகள் முன்னதாகவே அடையாளம் காண மருத்துவர்களுக்கு உதவலாம் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார். முதன்முறையாக நடந்த ‘ஏஐ எக்சிலரேட்’ மாநாட்டில் (AI Accelerate conference) திரு ஓங் இதனை அறிவித்தார்.
“இது ஹெல்தியர் எஸ்ஜி திட்டத்தின் அடுத்த கட்டம்; சுகாதாரப் பதிவுகளை முடிந்தவரை நன்கு பயன்படுத்திக்கொள்வது, ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ள சுகாதார அபாய மதிப்பீட்டு முறையைப் (clinical risk scoring) பயன்படுத்துவது, வருமுன் காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள செயற்கை நுண்ணறிவின் முன்கணிப்பு ஆற்றலை உபயோகிப்பது, சமூக அளவில் சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளைப் பயன்படுத்துவது,” என்று திரு ஓங் மாநாட்டில் குறிப்பிட்டார். பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்தில் நடைபெற்ற மாநாட்டுக்கு தேசிய சுகாதாரப் பராமரிப்புத் தொழில்நுட்ப சேவை நிறுவனமான சினேப்க்செ ஏற்பாடு செய்தது.
எனினும், மனிதர்களின் இடத்தை நிரப்ப முடியாது என்றும் அவர் சுட்டினார்.
“குடும்ப மருத்துவர்கள் மூலம் மனிதர் தொடர்பு இருக்கச் செய்வோம். நோய் வருவதற்கு முன்பு தங்களின் சுகாதாரத்தை நன்கு கவனித்துக்கொள்ள குடிறிருப்பாளர்களுக்கு வழிகாட்டி அதன் தொடர்பில் அவர்களின் ஆற்றலை மேம்படுத்துவோம்,” என்று திரு ஓங் விவரித்தார். மருத்துவர்கள் அறவே இல்லாமல் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது என்பது விமானி இல்லாமல் விமானத்தை இயக்குவதற்குச் சமம் என்று அவர் விளக்கினார்.
வரும் மாதங்களில் எந்த தேசிய சுகாதாரப் பராமரிப்பு சார்ந்த செயற்கை நுண்ணறிவுத் திட்டங்களைப் பொதுமக்கள் எதிர்பார்க்கலாம் என்றும் திரு ஓங் தெரிவித்தார்.
2027ஆம் ஆண்டுக்குள் குடிமக்களின் சுகாதாரத் தகவல்களைக் கொண்டிருக்கும் ஹெல்த்ஹப் செயலியில் ஹெல்த் படி, என்எச்ஜி கேர்ஸ், என்யுஎச்எஸ் ஆகிய செயலிகளில் இடம்பெறும் தகவல்கள் ஒன்றசேர்க்கப்பட்டிருக்கும். ஒன்றுசேர்க்கப்பட்ட தகவல்கள் இடம்பெறம் ஹெல்த்ஹப் செயலியை செயற்கை நுண்ணறிவின் மூலம் மேம்படுத்தலாம் என்று அமைச்சர் ஓங் குறிப்பிட்டார்.
அதோடு, நெஞ்சுக் கதிரியக்கச் சோதனைகைளுக்கு (chest X-ray) செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த பொதுச் சுகாதாரப் பராமரிப்புத் துறை திட்டமிட்டுள்ளது.

