நேப்பாள வெள்ளத்தில் மாயமான சிங்கப்பூரர்களைப் பற்றிய போலியான ‘ஏஐ’ படங்கள் அடங்கிய பதிவை சமூக ஊடகத் தளமான டிக்டாக் நீக்கியுள்ளது.
தவறான தகவல்களைப் பரப்பியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 26ஆம் தேதி நேப்பாளம், திபெத் பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதில் ஒன்பது சிங்கப்பூரர்கள் காணவில்லை.
காணாமல் போனவர்களில் நால்வரின் ‘ஏஐ’ படங்களும் மூன்று பேரின் உண்மையான படங்களும் ஒரு டிக்டாக் பதிவில் இடம்பெற்றிருந்தன.
ஆகஸ்ட் 31ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்ட அந்தப் பதிவு, கிட்டத்தட்ட 150,000 பார்வைகளையும் 300 கருத்துகளையும் பெற்றிருந்தது.
பயண முகவை ஒன்று ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியிட்ட உண்மையான படங்களை வைத்து இந்த ‘ஏஐ’ படங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, காணாமல் போன ஷாலினி என்பவரின் நெற்றியில் கறுப்பு நிறப் பொட்டு இருப்பதைப் போல ஏஐ படம் சித்தரித்திருந்தது.
அவர் எப்போதும் சிவப்பு நிறப் பொட்டு மட்டுமே வைப்பார் என அவரது கணவர் செல்வக்கணேஷ் தெரிவித்தார். அந்தப் பதிவு நீக்கப்பட்டதால் அவர் நிம்மதி அடைந்துள்ளார்.
சிங்கப்பூரின் ‘எச்டிஎக்ஸ்’ அமைப்பைச் சேர்ந்த நிபுணர்கள் ‘அல்கெமிஎக்ஸ்’ என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தப் படங்களை ஆய்வு செய்தனர்.
அதில், ஏஐ தொழில்நுட்பம் மூலம் முகங்கள் மாற்றப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
“இதுபோன்று பேரிடர்க் காலங்களில் போலியான படங்கள் மக்கள் மத்தியில் பெருமளவில் குழப்பத்தை ஏற்படுத்தும். எனவே, சமூக ஊடகங்களில் படங்களைப் பகிரும்முன் அவற்றின் உண்மைத்தன்மையை மக்கள் முழுமையாக உறுதிசெய்ய வேண்டும்,” என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.


