சிங்கப்பூரில் $1.3 பில்லியன் திரட்டினார் ஏஐ முன்னோடி

நவீன இயந்திர நுண்ணறிவை உருவாக்க முயற்சி

சிங்கப்பூரில் $1.3 பில்லியன் திரட்டினார் ஏஐ முன்னோடி

2 mins read
596528cb-96f1-4fd3-8407-5203263b4115
‘ஏஎம்ஐ லேப்ஸ்’ நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் யான் லெக்குன். - படம்: ஏஎம்ஐ லேப்ஸ்

நவீனச் செயற்கை நுண்ணறிவுத் (ஏஐ) தொழில்நுட்பத்தின் முன்னோடிகளில் ஒருவரான திரு யான் லெக்குன், அவரின் ‘ஏஎம்ஐ லேப்ஸ்’ நிறுவனத்திற்கு முதற்கட்டமாக 1.03 பில்லியன் ($1.3 பில்லியன்) அமெரிக்க டாலரைத் திரட்டியிருக்கிறார்.

சிங்கப்பூரின் முதலீட்டு நிறுவனமான தெமாசெக்கும் ‌ஷாப்பி நிறுவனத்தின் உரிமையாளரான ‘சீ’யும் அதற்கு ஆதரவளித்துள்ளன.

நவீன இயந்திர நுண்ணறிவை உருவாக்குவதற்கான முயற்சிகளுக்கு நிதி கைகொடுக்கும் என்று செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) அறிவிக்கப்பட்டது. உலக நடப்புகளைப் பிரதிபலிக்கும் காட்சிகளைக் கொண்டு ஏஐ மாதிரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகின்றன.

மனிதர்கள் ஒரு நடவடிக்கையைச் செய்யும் முன்பு எவ்வாறு சிந்திப்பார்களோ அதைப் போன்றே மாதிரிகளுக்குப் பயிற்சிகள் வழங்கப்படும் என்று அறிக்கையொன்றில் ஏஎம்ஐ லேப்ஸ் தெரிவித்தது.

“நிலவரம் எப்படி மாறுகிறது, நடவடிக்கைகள் எவ்வாறு விளைவுகளாக உருமாறுகின்றன என்பதை மாதிரிக் கட்டமைப்புகள் கணிக்கும். அதன்மூலம் பாதுகாப்புக்கும் நம்பகத்தன்மைக்கும் முக்கியத்துவம் அளித்து உலகின் தற்போதைய கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப அவற்றால் செயல்முறைகளைத் திட்டமிட முடியும்,” என்று அறிக்கை குறிப்பிட்டது.

‘லார்ஜ் லாங்குவேஜ் மாடல்ஸ்’ எனும் பெருமொழி மாதிரிகள், சேட்ஜிபிடி போன்றவற்றை நிறுவனத்தாரும் தனிமனிதர்களும் பரவலாகப் பயன்படுத்துகின்றனர். அவை கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதில்களைத் தருவதற்குப் பெரிய அளவிலான தரவுகளை நாடுகின்றன.

ஒப்புநோக்க, நவீன இயந்திர நுண்ணறிவு என்பது பாதுகாப்பானதாகவும் அதிகக் கட்டுப்பாடான சூழலில் பயன்படுத்தக்கூடியதாகவும் இருக்கும் என்று ஏஎம்ஐ லேப்ஸ் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவர் லெக்குன் தெரிவித்தார். ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் அந்த விவரங்களை அவர் பகிர்ந்துகொண்டார்.

மெட்டா நிறுவனத்தின் முன்னாள் தலைமை ஏஐ அறிவியலாளரான டாக்டர் லெக்குன், சென்ற ஆண்டு (2025) இறுதியில் அதிலிருந்து விலகினார். ஏஐ தொழில்நுட்பத்தைத் தோற்றுவித்த மூவரில் ஒருவராக அவர் அங்கீகரிக்கப்படுகிறார்.

கணினியியல் துறையில் நொபெல் பரிசுக்கு நிகரான டியூரிங் விருதை 2018ஆம் ஆண்டில் அவர் டாக்டர் ஜெஃப்ரி ஹின்டனுடனும் டாக்டர் யோ‌‌ஷ்வா பெங்கியோவுடனும் பகிர்ந்துகொண்டார்.

தெமாசெக், சீ நிறுவனங்களிடமிருந்து பெற்ற நிதி, தமது முயற்சிக்கு முக்கியமானது என்றார் டாக்டர் லெக்குன்.

“சிங்கப்பூர் எங்களுக்கு மிகவும் முக்கியமான இடம். சிங்கப்பூரில் எங்களுக்கு அதிகத் தொடர்பு உள்ளது. இங்கும் பொதுவாக ஆசியாவிலும் எங்களுக்கு நிறையப் பங்காளித்துவ நிறுவனங்கள் இருக்கின்றன. நல்ல திறனாளர்களும் உள்ளனர்,” என்று அவர் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்