சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு ‘ஏஐ’ திட்டங்கள்: கிராப், ‘ஆர்எஸ்எம்’ அறிமுகம்

சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு ‘ஏஐ’ திட்டங்கள்: கிராப், ‘ஆர்எஸ்எம்’ அறிமுகம்

2 mins read
eb7f79fd-0cb0-4352-b836-7c3bc89934d0
சிங்கப்பூர் எக்ஸ்போவில் நடைபெற்ற ‘ஏடிஎக்ஸ்’ மாநாட்டில் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மூத்த துணையமைச்சர் டான் கியட் ஹாவ் உரையாற்றினார். - படம்: சாவ்பாவ்

சிங்கப்பூரில் உள்ள வர்த்தகங்கள் மின்னிலக்க ரீதியில் உருமாற கிராப் நிறுவனமும் ‘ஆர்எஸ்எம் ஸ்டோன் ஃபோரஸ்ட் ஐடி’ எனும் இணையப் பாதுகாப்பு ஆலோசனை நிறுவனமும் சிறப்புத் திட்டங்களை அறிமுகம் செய்யவிருக்கின்றன.

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குக் கிட்டத்தட்ட 12,000 சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு அந்தத் திட்டங்கள் உதவும்.

தொழில்நுட்ப நிறுனங்களுடனான பங்காளித்துவம் மூலம் சிறிய, நடுத்தர நிறுவனங்களின் மின்னிலக்க உருமாற்றத்துக்குத் தேசிய அளவில் உதவுகிறது மின்னிலக்க நிறுவனத் திட்டம்.

கிராப் நிறுவனமும் ‘ஆர்எஸ்எம்’ நிறுவனமும் அந்தத் திட்டத்திற்கு ஆதரவளிக்கின்றன.

அந்த இரண்டு நிறுவனங்களையும் சேர்த்து மின்னிலக்க நிறுவனத் திட்டத்தின்கீழ் தற்போது 15 பங்காளி நிறுவனங்கள் உள்ளன. அலிபாபா கிளெட், அமசான் வெப் செர்விசஸ், டிபிஎஸ் வங்கி ஆகியவை திட்டத்தில் அங்கம் வகிக்கின்றன.

தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மூத்த துணையமைச்சர் டான் கியட் ஹாவ் கிராப், ‘ஆர்எஸ்எம்’ ஆகியவற்றின் புதிய பங்காளித்துவம் குறித்து அறிவித்தார். வியாழக்கிழமை (மே 21) நடைபெற்ற ‘ஏடிஎக்ஸ்என்டர்பிரைஸ்’ மாநாட்டில் திட்டம் அறிவிக்கப்பட்டது.

சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான கிராப் ‘ஏஐ’ உணவு, பானம், மின்வர்த்தகம், சில்லறை வர்த்தகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த 10,000 நிறுவனங்கள், இலவச இணையப் பயிற்சிக் காணொளிகளைப் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

அத்துடன், செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டுக்கு இடையூறாக இருக்கக்கூடிய பொதுவான தடைகளைக் களைவதற்கான இலவச வகுப்புகளும் இணையக் கருத்தரங்களும் நடத்தப்படும்.

சிங்கப்பூர் தொழில்நுட்ப, வடிவமைப்புப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இரண்டு நாள் செயற்கை நுண்ணறிவுத் திட்டத்தையும் கிராப் இணைந்து உருவாக்குகிறது.

‘ஆர்எஸ்எம்’ நிறுவனம், ‘ஆர்எஸ்எம் சைபர்2எஸ்எம்இ’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்யவிருக்கிறது.

அதன் மூலம் 2,000 சிறிய, நடுத்தர நிறுவனங்கள்வரை இலவச மோசடிப் பாவனைப் பயிற்சிகளைப் பெறலாம். ஒவ்வொரு நிறுவனத்திலிருந்தும் 30 ஊழியர்கள்வரை அந்தப் பாவனைப் பயிற்சியை மேற்கொள்ள முடியும்.

வெவ்வேறு பொறுப்புகளுக்கு ஏற்ப அந்த மோசடிப் பாவனைப் பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் உண்மையான வேலையில் எதிர்கொள்ளக்கூடிய மோசடிகளைப் பாவனைப் பயிற்சியாக மேற்கொள்வர்.

செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டை ஊக்குவிக்க சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான ‘ஏஐ இம்பெக்ட்’ விருதுகளையும் திரு டான் அறிவித்தார்.

குறிப்புச் சொற்கள்
செயற்கை நுண்ணறிவுநிறுவனம்திட்டம்