செயற்கை நுண்ணறிவைப் (ஏஐ) பயன்படுத்தி சிக்கலான முதுகுத் தண்டுவட அறுவை சிகிச்சைகளை வேகமாகவும் பாதுகாப்பாகவும் துல்லியமாகவும் டான் டோக் செங் மருத்துவமனை மேற்கொண்டு வருகிறது.
வேகமாக மூப்படைந்து வரும் மக்கள் தொகை கொண்ட சிங்கப்பூரில் தேய்மானத்தால் ஏற்படும் நரம்பு அழுத்தத்துடன் கூடிய முதுகுத் தண்டுவட வளைவு (Degenerative Scoliosis) போன்ற சிக்கலான முதுகுத் தண்டுவடப் பிரச்சினைகளால் மூத்தோர் பாதிக்கப்படக்கூடும்.
அதனால், அவர்களை அப்பிரச்சினைகளிலிருந்து மீட்டெடுப்பதற்காக இங்குள்ள மருத்துவமனைகள், சுகாதாரப் பராமரிப்பில் ‘ஏஐ’ பயன்பாட்டைப் பின்பற்றி வருகின்றன.
உதாரணமாக, இதய ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்புகளைக் கண்டறிவதற்காக எடுக்கப்படும் வருடிகளை (scan) விரைவாகக் கூர்ந்து ஆராய்வதற்கும் மருத்துவ ஆய்வக அறிக்கைகளைப் புரிந்துகொள்வதற்கும் அந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.
அதேபோன்று, டான் டோக் செங் மருத்துவமனையின் எலும்பியல் அறுவை சிகிச்சைப் பிரிவு 2021ஆம் ஆண்டில் தொடங்கி இதுவரை கிட்டத்தட்ட 250க்கும் மேற்பட்ட முதுகுத் தண்டுவட அறுவை சிகிச்சைகளை ‘ஏஐ’ உதவியுடன் வெற்றிகரமாகச் செய்துள்ளது.
அவற்றில் பெரும்பாலானவை மூத்தோருக்கு மேற்கொள்ளப்பட்ட சிக்கலான அறுவை சிகிச்சைகளாகும்.
அறுவை சிகிச்சையின் முந்தைய திட்டமிடலுக்கும் கருவிகளைத் துல்லியமாகப் பொருத்துவதற்கும் ‘ஏஐ’ உதவுவதால், நிபுணர்கள் அறுவை சிகிச்சையின் மற்ற அம்சங்களில் தங்கள் கவனத்தைச் செலுத்த முடிவதாக அந்த மருத்துவமனையின் எலும்பியல் அறுவை சிகிச்சைப் பிரிவு மருத்துவர் வெய்ன் யாப் கூறினார்.
மேலும், அறுவை சிகிச்சை செய்துகொண்ட நோயாளிகள் கண்காணிப்புக்காக மருத்துவமனையில் தங்கும் நேரமும் குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
சிக்கலான அறுவை சிகிச்சை செய்த நோயாளிகள் மருத்துவமனையில் ஏழு முதல் 14 நாள்கள் தங்கவேண்டிய சூழல் இருந்ததாகவும் ‘ஏஐ’ பயன்பாட்டுக்குப் பிறகு அது மூன்றிலிருந்து ஆறு நாள்களாகக் குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதேபோன்று அறுவை சிகிச்சை நடைபெறும் காலமும் 20 விழுக்காடுவரை குறைந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் ‘ஏஐ’ உதவியுடன் டான் டோக் செங் மருத்துவமனையில் நடைபெற்ற முதுகுத் தண்டுவட அறுவை சிகிச்சையால் எந்தவொரு நோயாளியும் பக்கவாதத்தால் பாதிக்கப்படவில்லை என்றும் உயிரிழப்பு நிகழவில்லை என்றும் மருத்துவர் யாப் தெரிவித்தார்.
இருப்பினும், அந்தச் சிகிச்சைக்கான செலவினங்கள் சற்று அதிகம்தான் என்றாலும், அதற்காக மக்கள் ஒருபோதும் அதை மேற்கொள்ளத் தயங்கவில்லை என அவர் கூறினார்.

