தமிழில் உரையாடும் செயற்கை நுண்ணறிவுக் கட்டமைப்பு: மெராலையன்

2 mins read
தமிழ் உள்ளிட்ட தென்கிழக்காசிய மொழிகளில் மேம்பட்ட ஆற்றல்களுடன் மெராலையனின் இரண்டாம் பதிப்பு வெளியானது
8bdd5f34-1135-4477-9253-9b2f00248554
மே 28ஆம் தேதி ஏடிஎக்ஸ் உச்சநிலை மாநாட்டில் ‘மெராலையன்’ எனும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் இரண்டாம் பதிப்பை அறிமுகப்படுத்திய தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ. - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு
multi-img1 of 3

தனியாக வாழும் முதியோர் கூடிய விரைவில் செயற்கை நுண்ணறிவு உதவியாளருடன் தொலைபேசியில் தமிழிலேயே உரையாடி தனிமையைப் போக்கிக்கொள்ள முடியும்.

மேலும், அவர் பேசும் விதத்திலிருந்து அவருடைய உணர்வுகளைப் புரிந்துகொண்டு, உதவி தேவைப்படும்போது பராமரிப்பாளரை அது அழைக்கும்.

தொலைபேசியில் முதியவர் பேசும் விதத்திலிருந்து அவருடைய உணர்வுகளை மெராலையன் எனும் செயற்கை நுண்ணறிவுக் கட்டமைப்பு புரிந்துகொள்ளும்.
தொலைபேசியில் முதியவர் பேசும் விதத்திலிருந்து அவருடைய உணர்வுகளை மெராலையன் எனும் செயற்கை நுண்ணறிவுக் கட்டமைப்பு புரிந்துகொள்ளும். - படம்: ரவி சிங்காரம்

ஏ*ஸ்டார் தகவல் தொழில்நுட்ப ஆய்வுக் கழகம் (A*STAR I2R), தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் (ஐஎம்டிஏ) ஆகியவற்றின் ஆதரவில் வெளியிடப்பட்டுள்ள மேம்படுத்தப்பட்ட மெராலையன் (MERaLiON V2) செயற்கை நுண்ணறிவுக் கட்டமைப்பு அதைச் சாத்தியமாக்குகிறது.

தமிழ், மலாய், தாய் (Thai), பஹாசா இந்தோனீசியா, வியட்னாமீஸ் ஆகிய இவ்வட்டார மொழிகளில் மெராலையனின் மேம்பட்ட ஆற்றல்களை மே 28ஆம் தேதி ஏடிஎக்ஸ் உச்சநிலை மாநாட்டில் அறிமுகப்படுத்தினார் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ.

கூடுதலான ஐந்து தென்கிழக்காசிய மொழிகளுக்கு மெராலையனின் விரிவாக்கம், அன்றாடம் அம்மொழிகள் பேசும் 450 மில்லியன் மக்களுடன் தொடர்பு ஏற்படுத்தியுள்ளதாகக் கூறினார் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ.
கூடுதலான ஐந்து தென்கிழக்காசிய மொழிகளுக்கு மெராலையனின் விரிவாக்கம், அன்றாடம் அம்மொழிகள் பேசும் 450 மில்லியன் மக்களுடன் தொடர்பு ஏற்படுத்தியுள்ளதாகக் கூறினார் தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ. - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

“பல இனச் சமுதாயங்களில் நாம் அதிகம் காண்பதைப் போல், மொழிகள் கலந்து பேசப்படும் வாக்கியங்களையும் மெராலையனால் புரிந்துகொள்ள முடிகிறது,” எனப் பாராட்டினார் அமைச்சர் டியோ.

2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான மெராலையனின் முதல் பதிப்பு (version) ஆங்கிலம், மாண்டரின், சிங்கிலி‌ஷ் ஆகிய மொழிகளிலேயே கவனம் செலுத்தியிருந்தது.

பல இனச் சமுதாயங்களில் நாம் அதிகம் காண்பதைப் போல், மொழிகள் கலந்து பேசப்படும் வாக்கியங்களையும் பேச்சாளரின் உணர்வுகளையும் மெராலையனால் புரிந்துகொள்ளமுடிகிறது.
தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ

அதன் முதல் பதிப்பு வெளியானபோது உலகெங்கும் 90,000க்கும் மேற்பட்ட முறை பதிவிறக்கம் கண்டது.

கூடுதல் மொழிகளுக்கான ஆதரவு மூலம் தென்கிழக்காசியாவில் வாடிக்கையாளர் சேவை, சமூக சேவை, சந்தைப்படுத்துதல் எனப் பல்வேறு துறைகளில் மெராலையன் பயன்படுத்தப்படும்.

மெராலையனின் பயன்பாட்டை விரைவுபடுத்த ஐஎம்டிஏவும் ஏ*ஸ்டாரும் இணைந்து புதிய மெராலையன் குழுமத்தைத் தொடங்கியுள்ளன. அதில் எஸ்பிஎச் மீடியா, எஸ்டி இஞ்சினியரிங், டிபிஎஸ், மைக்ரோசாஃப்ட் சிங்கப்பூர், கிரேப் போன்ற பல நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.

புதிய குழுமத்திலுள்ள ‘ஏக்சியம் ஐடி சொலியூ‌‌ஷன்ஸ்’, மெராலையன் மூலம் மோசடித் தடுப்புக்கான தீர்வை உருவாக்கியுள்ளது. “தெரியாத தொலைபேசி எண்ணிலிருந்து அழைப்பு வரும்போது எங்கள் மோசடித் தடுப்புக் கட்டமைப்பு முதலில் அழைப்பாளருடன் பேசும். மோசடிக்கான அறிகுறிகள் தெரிந்தால் தொலைபேசி அழைப்பை ரத்துசெய்துவிடும்,” என்றார் ‘ஏக்சியம்’மின் வர்த்தக மேம்பாட்டு இயக்குநர் லாம் பாங் நியென்.

செய்தியைப் பெறும் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு மெராலையன் மூலம் எவ்வாறு மேம்படுத்தலாம் என எஸ்பிஎச் மீடியா ஆராய்ந்துவருகிறது.

மோசடித் தடுப்புக்காக மெராலையன் மூலம் ஏக்சியம் நிறுவனம் உருவாக்கியுள்ள தீர்வு. தனிமையில் வாழும் முதியோருக்கான செயற்கை நுண்ணறிவு உதவியாளரையும் அந்நிறுவனம் மெராலையன் மூலம் உருவாக்கியுள்ளது.
மோசடித் தடுப்புக்காக மெராலையன் மூலம் ஏக்சியம் நிறுவனம் உருவாக்கியுள்ள தீர்வு. தனிமையில் வாழும் முதியோருக்கான செயற்கை நுண்ணறிவு உதவியாளரையும் அந்நிறுவனம் மெராலையன் மூலம் உருவாக்கியுள்ளது. - படம்: ரவி சிங்காரம்

ஏஐ சிங்கப்பூர் உருவாக்கியுள்ள சீ-லையன் (SEA-LION) எனும் மற்றொரு தென்கிழக்காசிய மொழி சார்ந்த செயற்கை நுண்ணறிவுக் கட்டமைப்பிலிருந்து மெராலையன் சற்று வேறுபடுகிறது. சீ-லையன் எழுத்து வடிவிலான தரவுகளை ஆராய்ந்து மொழிபெயர்ப்பு, சுருக்கி வரைதல், கேள்விக்குப் பதிலளித்தல் போன்றவற்றைச் செய்கிறது.

மெராலையனோ ஒலி வடிவிலான பேச்சைப் புரிந்துகொள்வதில் பயிற்சி பெற்றுள்ளது. அதனால் ஒலியிலிருந்து எழுத்தாக மாற்றுவது, உரையாடல்களின் ஒலிப் பதிவுகளைச் சுருக்கிச் சொல்வது, உணர்வுகளைப் புரிந்துகொள்ளல் போன்றவற்றை அதனால் செய்யமுடிகிறது.

இதையடுத்து சீனக் கிளைமொழிகளிலும் (dialects) மெராலையனின் ஆற்றல்கள் மேம்படுத்தப்படும்.

மெராலையனை https://huggingface.co/MERaLiON எனும் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.

குறிப்புச் சொற்கள்