நோயாளிகளுடன் மருத்துவர்கள் உறவாட ‘ஏஐ’ நேரம் தரும்: சிங்ஹெல்த் தலைமை நிர்வாகி

நோயாளிகளுடன் மருத்துவர்கள் உறவாட ‘ஏஐ’ நேரம் தரும்: சிங்ஹெல்த் தலைமை நிர்வாகி

2 mins read
ed092e14-4145-4350-a8b4-6eb346fab113
சிங்கப்பூரின் முக்கியமான சுகாதாரச் சேவை நிறுவனங்களில் ஒன்றான சிங்ஹெல்த் குழுமத்தின் தலைமை நிர்வாகி இங் வாய் ஹோ, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். - படம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சுகாதார ஊழியரணியை மேம்படுத்தும் புத்தாக்கங்களுக்கு வித்திடவும் புதிய மருந்துகளின் உருவாக்கத்தை முடுக்கிவிடவும் சிங்கப்பூர் தனது செயற்கை நுண்ணறிவு வழிமுறைகளை மறுஆய்வு செய்திருப்பதாகச் சுகாதார அமைச்சர் ஓங் யீ காங், சில நாள்களுக்கு முன்னதாக அறிவித்திருந்தார்.

நோயாளிகளின் நோயை மேலும் துல்லியமாக உறுதிசெய்வது, மருத்துவர்களின் நிர்வாகப் பணிச்சுமையைக் குறைப்பது, சுகாதாரக் கட்டமைப்பின் செயலாக்கத்தை மேம்படுத்துவது ஆகியவற்றுக்கு ஏஐ மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சிங்கப்பூரின் முக்கியமான சுகாதாரச் சேவை நிறுவனங்களில் ஒன்றான சிங்ஹெல்த் குழுமத்தின் தலைமை நிர்வாகி இங் வாய் ஹோ, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் அளித்த பேட்டி ஒன்றில் அவ்வாறு கூறினார்.

வேலை நாளில் வார்டு தாதி ஒருவரை நீங்கள் பின்தொடர்ந்தால், அவரது நேரத்தில் கிட்டத்தட்ட 40 விழுக்காடு குறிப்புகளை எழுதுவதிலும் மருத்துவ இருப்புகளைச் சரிபார்ப்பதிலும் செலவிடப்படுகிறது.

ஆனால் நோயாளிகளுக்கு மருத்துவர், தாதியர் ஆகியோருடனான நேரடி உரையாடல் மிக முக்கியமாக உள்ளது. இதற்கான கூடுதலான நேரத்தைத் தொழில்நுட்பம் அளிக்கலாம் என்று பேராசிரியர் இங் கூறினார்.

“இதை ஒருவகையான முரண் என்றே கூறலாம். சுகாதாரத் துறையில் மனிதாபிமானத்தை மேம்படுத்துவதற்காகச் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த நாங்கள் விரும்புகிறோம். மனிதத் தொடர்புள்ள ஏஐ என நாங்கள் இதனை அழைக்கிறோம்,” என்று அவர் கூறினார்.

சுகாதாரத் துறையில் ஏஐ பயன்பாட்டைப் புகுத்தும் இந்த முறை சரியானது எனப் பேராசிரியர் இங் நம்புகிறார். பிறரது வாழ்வாதாரத்தைப் பறிக்க முற்படாத இந்த முறை, செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பப் பயன்பாட்டுக்கு வகை செய்கிறது என்றார்.

எடுத்துக்காட்டுக்கு, நோட் படி (Note Buddy) எனும் மென்பொருள், மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையிலான உரையாடலைச் சுருக்கித் தரும். மருத்துவருக்குப் பதில் இந்தத் தொழில்நுட்பம் என்றில்லாமல், மருத்துவருக்கு வசதியாகவும் வேலையை எளிதாக்கவும் இந்தத் தொழில்நுட்பம், 2024 செப்டம்பர் முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்தத் தொழில்நுட்பம் வழி மருத்துவர்கள் நோயாளிகளுடன் உரையாடும்போது இடையிடையே குறிப்பு எடுத்துக்கொள்ளும் தேவையின்றி முழு கவனத்துடன் உரையாடலில் ஈடுபடலாம்.

மனிதவளப் பற்றாக்குறைக்கு இடையிலும் சுகாதாரத் துறையின் செயல்திறனை இத்தகைய தொழில்நுட்பங்கள் கட்டிக்காக்கும் என்று பேராசிரியர் இங் கூறினார்.

குறிப்புச் சொற்கள்