சுகாதார அமைச்சின் ‘மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி’ (ஹெல்தியர் எஸ்ஜி) திட்டத்தின்கீழ் பதிந்துகொண்ட மக்களுக்குச் சிறப்பு உடற்பயிற்சித் திட்டங்களை வகுத்துத் தரும் புதிய செயற்கை நுண்ணறிவுச் செயலியின் ஆறு மாதச் சோதனை இயக்கம் ஜூலை 27ஆம் தேதி தொடங்கியது.
பொதுவாக உடல்நலத்துடன் உள்ள 40 முதல் 64 வயதுக்குட்பட்ட ஏறக்குறைய 270,000 பேருக்கு இச்சேவை வழங்கப்படுகிறது. நீரிழிவு அல்லது ரத்தக் கொதிப்பு போன்ற நாள்பட்ட நோய்கள் இல்லாத, தங்களின் மருத்துவருடன் கலந்துரையாடி ஆரோக்கியத் திட்டத்தை உருவாக்கியவர்கள் இதில் பயன்பெறலாம்.
‘ஹெல்த்பிளான் ஏஐ’ செயலியை ஹெல்த்ஹப் கைப்பேசிச் செயலி அல்லது இணையத்தளம் வாயிலாகப் பயனாளர் அணுக முடியும்.
சுகாதார அமைச்சின் ‘சினேப்ஸ்’ (Synapxe) தொழில்நுட்ப முகவை, சுகாதார மேம்பாட்டுக் கழகம், மருத்துவ வல்லுநர்கள் இணைந்து இச்செயலியை உருவாக்கியுள்ளனர்.
பயன்படுத்துவோரின் வயது, விருப்பம், வாழ்க்கை முறை, பரிந்துரைக்கப்பட்ட இலக்குகளுக்கு ஏற்ப ஏழு நாள் உடற்பயிற்சி வழிகாட்டியை இது தயாரித்துத் தரும்.
இதில் உடற்பயிற்சிகளுக்கான காணொளிகளும் விளக்கங்களும் இச்செயலியில் இடம்பெற்றுள்ளன.
தலைச்சுற்றல், மூச்சுத்திணறல், இதய அசௌகரியம் போன்ற அறிகுறிகள் இருந்தால், உடற்பயிற்சி செய்வதற்கு முன் மருத்துவரை அணுகுமாறு இது அறிவுறுத்தும்.
பயன்படுத்துபவரின் பயன்பாட்டு விகிதம், கருத்துகள், பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றுதல் ஆகிய மூன்று முக்கிய அம்சங்கள் இதில் கண்காணிக்கப்படும்.
அதன் முடிவுகளை ஆய்வு செய்த பிறகே, இந்தச் சேவையை நிரந்தரமாக்குவது குறித்துச் சுகாதார அமைச்சு முடிவு செய்யும்.
தேசிய அளவிலான ‘மேலும் ஆரோக்கியமான எஸ்ஜி’ திட்டத்தின்கீழ், 2026 மே மாத நிலவரப்படி, 1,100க்கும் மேற்பட்ட குடும்ப நல மருத்துவர்கள், பலதுறை மருந்தகங்கள் வாயிலாகத் தகுதிபெற்ற மக்களில் 59 விழுக்காட்டுக்கும் அதிகமானோர், அதாவது 1.4 மில்லியனுக்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் இணைந்துள்ளனர்.
இதில் பதிந்துகொண்டவர்களில் 83 விழுக்காட்டுக்கும் அதிகமானோர், அதாவது 1.16 மில்லியனுக்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் தங்களின் முதலாவது ஆரோக்கியத் திட்டத்தைப் பூர்த்தி செய்துள்ளனர்.
அதன்மூலம், ஆரோக்கியத் திட்டத்தைக் கொண்டிருக்கும் கால்வாசி பங்கினர் புதிய செயற்கை நுண்ணறிவுக் கருவியைப் பெற்றுள்ளனர்.

