தமக்கு உதவி கிடைப்பதுபோல் வாய்ப்பு கிட்டும்போது தாமும் பிறருக்கு உதவ வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் திரு பிரபு நாயுடு, 68.
ஆறாண்டுகளுக்கு முன்னர் அவருக்கு மூன்றாம் கட்டப் பெருங்குடல் புற்றுநோய் கண்டறியப்பட்டது. புற்றுநோய் நிணநீர்க் கணுக்களுக்குள் (Lymphatic nodes) பரவிவிட்டதால் அவருக்கு 50 விழுக்காடு மட்டுமே உயிர்வாழும் வாய்ப்பு இருந்ததாகக் கணிக்கப்பட்டது.
அவரது பெருங்குடலின் ஒரு பகுதி அறுவை சிகிச்சைமூலம் அகற்றப்பட்டது. அவர் கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சைகளையும் மேற்கொண்டார். சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து திரு பிரபு தற்போது நலமாக உள்ளார்.
புற்றுநோயாளிகள் ஒவ்வொருவரும் நோயை ஒவ்வொருவிதமாகக் கையாள்வர். திரு பிரபு தமக்கு ஏற்பட்ட நோயைப் பற்றி முதலில் ஆழமாக அறிந்துகொள்ள முனைந்தார்.
“குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுடன், பெருங்குடல் புற்றுநோய் உள்ளவர்களுடன் அல்லது அதிலிருந்து மீண்டு வந்தவர்களுடன் உரையாடி அவர்களின் அனுபவங்களை அறிந்துகொண்டேன்,” என்றார் திரு பிரபு.
வெவ்வேறு மருத்துவமனைகளைச் சேர்ந்த புற்றுநோய் ஆதரவுக் குழுக்களில் சேர்ந்த திரு பிரபு, தொடக்கத்தில் அங்கிருந்த புற்றுநோயாளிகளுடன் உரையாடி ஆதரவு பெற நினைத்தார். அதுவே பின்னர் அவரது தொண்டூழியப் பயணத்திற்கு வித்திட்டது.
சிங்கப்பூர்ப் புற்றுநோய்ச் சமூகத்தின் ‘செமிகோலோன்ஸ்’ குழுவில் சேர்ந்த திரு பிரபு, குழுவைச் சேர்ந்த இதர நோயாளிகளிடம் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டு அவர்களுக்குத் தோள்கொடுத்தார்.
டான் டோக் செங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற திரு பிரபு, அங்கிருந்த ‘கோல்ரெக்ட் படீஸ்’ ஆதரவுக் குழுவிலும் சேர்ந்தார்.
தொடர்புடைய செய்திகள்
அத்துடன், டான் டோக் செங் மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகள் காத்திருப்புப் பகுதியில் நோயாளிக் கல்விப் பிரிவு எனும் திட்டத்தையும் அவர் தொடங்கினார்.
அதில், ஆதரவுக் குழுவைச் சேர்ந்த ஒருவர் புதிதாகக் கண்டறியப்பட்ட பெருங்குடல் புற்றுநோயாளிகளை அணுகி, அவர்களுக்கு உதவ நோயாளித் தூதர்கள் இருக்கிறார்கள் என்பதைத் தெரிவிக்கும் பணியில் ஈடுபட்டார்.
சிங்ஹெல்த் கழகத்தில் சிகிச்சை பெறாவிட்டாலும் திரு பிரபு ‘சிங்ஹெல்த் நோயாளி முன்னெடுப்புக் கட்டமைப்பு’ எனும் திட்டத்திலும் மிகத் துடிப்புடன் ஈடுபட்டு வருகிறார். பயிலரங்குகள், பயிற்சி அமர்வுகளின் கற்பித்தல் முறையை மேம்படுத்த அவர் உதவி வருகிறார்.
நிறுவன வளர்ச்சி ஆலோசகர், ஒருங்கிணைப்பாளர், பயிற்றுவிப்பாளர் எனப் பல்வேறு பொறுப்புகளை அவர் கையாள்கிறார்.
சிங்ஹெல்த் வளாகத்தில் புதன்கிழமை (மே 28) நடந்த சிங்கப்பூர் சுகாதார ஊக்குவிப்பு நோயாளி, பராமரிப்பாளர் விருது விழாவில் தொண்டூழியர் பிரிவில் திரு பிரபுவிற்கு விருது வழங்கப்பட்டது.
“நோய்களுக்குச் சிகிச்சை அளிக்கும் சுகாதாரக் கட்டமைப்பாக இருப்பதற்கு அப்பாற்பட்டு மீள்திறனையும் பிறருக்கு உதவ வேண்டுமென்ற மனப்பான்மையையும் வளர்க்கும் சுகாதாரக் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்பதை இவ்விருது விழா நினைவூட்டுகிறது,” என்றார் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட தகவல், மின்னிலக்க மேம்பாட்டு, சுகாதாரத் துணை அமைச்சர் ரஹாயு மஹ்ஸாம்.
“நோயாளிகள், பராமரிப்பாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தொண்டூழியர்கள் எனப் பலரும் ஒரு சமூகமாக ஒருவருக்கொருவர் அளிக்கும் ஆதரவை வலுப்படுத்த இணைந்து செயல்படுகிறார்கள்,” என்று திருவாட்டி ரஹாயு பாராட்டினார்.
கடந்த 2010ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த விருது விழா சுகாதாரச் சவால்களை மனவலிமையுடன் கையாளும் தனிமனிதர்களை அடையாளம் கண்டு அங்கீகாரம் அளிக்கிறது.
இதுவரை மொத்தம் 50 புற்றுநோயாளிகளுடன் பேசி அவர்களுக்கு ஆதரவு வழங்கி வந்துள்ள திரு பிரபு, “நம் இந்தியச் சமுதாயத்தில் பலர் புற்றுநோய் வந்துவிட்டால் அதனைப் பற்றிப் பிறரிடம் வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ளத் தயங்குகின்றனர். அவர்களுக்கு நான் ஆதரவாக இருக்க விரும்புகிறேன். இந்தியச் சமுதாயத்திற்கென ஒரு புற்றுநோய் ஆதரவுக் குழுவை உருவாக்குவது எனது அடுத்த இலக்கு,” என்று அவர் கூறினார்.