செர்விஸ்னவ் நிறுவனத்துடன் இணைந்து நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரி 2030க்குள் செயற்கை நுண்ணறிவில் (ஏஐ) 1,500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குப் பயிற்சி வழங்கவுள்ளது.
ஏஐ புத்தாக்கங்களைப் பாதுகாப்பான முறையில் உருவாக்க உதவும் புதிய இணையத்தளத்தில் அவர்கள் பயிற்சி பெறுவர்.
‘செர்விஸ்னவ் பாதுகாப்பான தளம் சிங்கப்பூர்’ (ServiceNow Protected Platform Singapore/SPP-SG) எனும் அத்தளத்தை ஜூன் 11ஆம் தேதி செர்விஸ்னவ் அறிமுகப்படுத்தியது.
அத்தளம் தரவுகளைச் சிங்கப்பூரிலேயே சேமித்து பாதுகாப்பாக ஆராயும். அதனால், அரசாங்கத் துறை போன்ற கட்டுப்பாடுகள் நிறைந்த துறைகளில் அது பயனளிக்கக்கூடும்.
சிங்கப்பூரின் மின்னிலக்கப் பொருளியலுக்கும் எதிர்காலத்துக்கும் தயாரான ஊழியரணியை உருவாக்கும் முயற்சியில், நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியுடன் புதிய பங்காளித்துவத்தையும் செர்விஸ்னவ் அறிவித்தது.
செர்விஸ்னவ்வின் புதிய தளம்மூலம் நடைமுறை உலகில் பொதுத்துறை சந்திக்கும் சவால்களுக்குச் செயற்கை நுண்ணறிவுத் தீர்வுகளை அமைப்பதில் மாணவர்கள் அனுபவம் பெறுவர். அவர்கள் தொழில்துறையினுள் நுழையப் பயிற்சிபெறும் மாணவர்களாகவோ தொடர் கல்வி மாணவர்களாகவோ இருக்கலாம்.
செர்விஸ்னவ், நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியுடன் இணைந்து செயற்கை நுண்ணறிவை மையப்படுத்தும் பாடத்திட்டம், தொழில்துறைச் சான்றிதழ்கள், ஆய்வுத் திட்டங்கள் போன்றவற்றையும் அமைக்கும்.
இதன்மூலம் நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியின் தகவல் தொழில்நுட்பப் பள்ளியைச் சார்ந்த மாணவர்கள் கட்டமைப்பு நிர்வாகிக்கான (System Administrator) சான்றிதழையும் பெறலாம்.

