நோய்வாய்ப்பட்ட கப்பல் ஊழியர் ஒருவர், சனிக்கிழமை (பிப்ரவரி 7) ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
அவரை மீட்பதற்கு ‘ரெஸ்க்யூ 10 எச்225எம்’ ரக ஹெலிகாப்டர் ஒன்று உடனே அனுப்பப்பட்டதாக அதே நாள் ஃபேஸ்புக் பதிவில் சிங்கப்பூர் ஆகாயப் படை தெரிவித்தது.
உடனடி மருத்துவக் கவனிப்புத் தேவைப்பட்ட அவர், சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாக அது கூறியது.
அங்குச் சென்றபோது அவர் சுயநினைவுடன் நல்ல நிலையில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
சாங்கியில் நடைபெறும் சிங்கப்பூர் விமானக் கண்காட்சிக்கு இடையில் ‘ரெஸ்க்யூ 10 ரக ஹெலிகாப்டர்’ அனுப்பப்பட்டதாக ஆகாயப் படை தெரிவித்தது.
“நோயாளி விரைவில் குணமடைய வேண்டும் என விரும்புகிறோம். உயிர்களைக் காப்பாற்றுவதற்காக ஒவ்வொரு நாளும் எந்த நேரமும் தயாராக இருக்கும் ஆகாயப் படை வீரர்களுக்கும் சுகாதாரப் பராமரிப்புத் துறை வீரர்களுக்கும் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்,” என்று ஆகாயப் படை குறிப்பிட்டது.

