தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஏர் இந்தியா விபத்து மிகவும் விலையுயர்ந்த காப்பீட்டுக் கோரிக்கையாக இருக்கும்

2 mins read
a62a1588-001a-47cf-bfc2-5f2f264c9d5b
விபத்துக்குள்ளான ஏர் இந்தியாவின் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம். - படம்: இபிஏ

விமான விபத்துகளில் தரையில் சேதம் ஏற்படுவது ஒப்பீட்டளவில் அரிது என்று சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக விமானப் போக்குவரத்து சட்டப் பேராசிரியர் ஆலன் டான் கூறினார்.

மேலும், லண்டனுக்குச் செல்லும் ஏர் இந்தியா விமானம் 171ல் பயணம் செய்யாத பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கோருவது இந்திய உள்நாட்டுச் சட்டத்தின் கீழ் கையாளப்பட வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானதில், அதில் இருந்த 241 பேர் கொல்லப்பட்டதாகவும், அகமதாபாத்தில் உள்ள மருத்துவ ஊழியர்கள் விடுதிக்குள் விமானம் மோதியதில் குறைந்தது 24 பேர் இறந்ததாகவும் அதிகாரிகள் வியாழக்கிழமை (ஜூன் 12) தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 13) தனது ‘லிங்க்ட்இன்’ பதிவில், பயணிகள் மாண்ட்ரியல் ஒப்பந்தத்தின் கீழ் பாதுகாக்கப்பட்டிருப்பர் என்று பேராசிரியர் கூறினார்.

“இது அனைத்துலக விமான விபத்துகளால் ஏற்படும் மரணம் அல்லது உடல் ரீதியான காயங்களுக்கு இன்றைய மாற்று விகிதத்தில் சுமார் $276,000 வரை இழப்பீடு கோர அனுமதிக்கும் ஓர் அனைத்துலக ஒப்பந்தமாகும்.

“இது விமான நிறுவனம் தவறு செய்ததா, இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையாகும்,” என்று என்றும் பேராசிரியர் டான் விளக்கினார்.

“ஆனால் தரையில் ஏற்பட்ட சேதத்திற்கான இழப்பீடு எவ்வாறு கையாளப்படுகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை. மேலும் வாழ்க்கைத் தரங்கள் குறைவாக உள்ள வளரும் நாடுகளில் எந்தவொரு வழங்கீடுகளும் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் இழப்பீட்டுத் தொகை உண்மையான இழப்புகளுடன் பிணைக்கப்பட்டுள்ளது.

“விமான விபத்துகளில் தரையிலுள்ள உயிர்களுக்கும் சொத்துகளுக்கும் சேதம் ஏற்படுவது மிகவும் கொடூரமான உண்மை. ஆனால் பேரழிவை ஏற்படுத்தும் என்றாலும், இது ஒப்பீட்டளவில் அரிதானது,” என்று பேராசிரியர் டான் தனது பதிவில் குறிப்பிட்டார்.

“நிச்சயமாக, இது இந்திய விமானப் போக்குவரத்து வரலாற்றில் மிகவும் விலையுயர்ந்த காப்பீட்டுக் கோரிக்கையாக இருக்கும்,” என்றும் அவர் கருத்துரைத்தார்.

குறிப்புச் சொற்கள்