சிங்கப்பூர் - கிரைஸ்ட்சர்ச் நேரடி விமான சேவையைத் தொடங்குகிறது ஏர் நியூசிலாந்து

தோக்கியோ, பெர்த் நகரங்களுக்கும் புதிய நேரடிச் சேவைகள்

சிங்கப்பூர் - கிரைஸ்ட்சர்ச் நேரடி விமான சேவையைத் தொடங்குகிறது ஏர் நியூசிலாந்து

1 mins read
8a24cf03-05cc-48f4-95f1-7bb4fd6ceda0
சிங்கப்பூர் - கிரைஸ்ட்சர்ச் நேரடி விமானப் பயணத்துக்கான விமானச் சீட்டு விற்பனை தொடங்கியுள்ளது. - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

சிங்கப்பூருக்கும் நியூசிலாந்தின் கிரைஸ்ட்சர்ச் நகருக்கும் இடையே ஏர் நியூசிலாந்து நிறுவனம் நேரடி விமானச் சேவையை அக்டோபர் 28ஆம் தேதி தொடங்க உள்ளது.

கிட்டத்தட்ட 10 மணி நேர பயணத்தைக் கொண்ட, இந்த விமானச் சேவையில் மேம்படுத்தப்பட்ட ‘போயிங் 787 ட்ரீம்லைனர்’ ரக விமானங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக ‘ஏர் நியூசிலாந்து’ நிறுவனம் புதன்கிழமை (மே 20) அறிவித்துள்ளது.

வாரத்திற்கு மூன்று நாள்கள் இயக்கப்படும் இந்தச் சேவைக்கான விமானச் சீட்டு விற்பனை தற்போது தொடங்கியுள்ளது.

குளிர்காலத்தில் இந்த வழித்தடத்தில் 34,000க்கும் அதிகமான இருக்கைகள் இருக்கும்.

தற்போது சிங்கப்பூரிலிருந்து ஆக்லாந்துக்கு ஏர் நியூசிலாந்து சேவை வழங்குகிறது.

அக்டோபர் 28 முதல் நவம்பர் 27 வரை, சிங்கப்பூரிலிருந்து புதன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் நள்ளிரவு 12:40 மணிக்கு விமானம் புறப்படும். அவ்விமானம் கிரைஸ்ட்சர்ச்சிலிருந்து மாலை 5:20 மணிக்குப் புறப்படும்.

நவம்பர் 30 முதல் மார்ச் 26, 2027 வரையில், சிங்கப்பூரிலிருந்து திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் விமானச் சேவை இடம்பெறும். கிரைஸ்ட்சர்ச்சிலிருந்து புதன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் விமானங்கள் திரும்பும்.

கிரைஸ்ட்சர்ச்சிலிருந்து தோக்கியோ, பெர்த் நகரங்களுக்கும் புதிய நேரடிச் சேவைகளை விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த கூடுதல் விமானச் சேவைகள் பிரிட்டன், ஐரோப்பா, இந்தியா, தென்கிழக்கு ஆசியப் பயணிகள் சிங்கப்பூர் வழியாக நியூசிலாந்திற்கு எளிதாகப் பயணம் செய்ய பெரிதும் உதவும் என்று ஏர் நியூசிலாந்து தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்