பாலர் பள்ளிகளில் காற்று சுத்திகரிப்பான் தேவை: கோ பெய் மிங்

பாலர் பள்ளிகளில் காற்று சுத்திகரிப்பான் தேவை: கோ பெய் மிங்

படம்: சாவ்பாவ்

03 Nov 2026 - 10:05 pm

2 mins read

சிங்கப்பூரில் உள்ள பத்துப் பாலர் பள்ளிகளில் ஒன்பதுக்கும் மேற்பட்டவற்றின் வளாகங்களில் குளிரூட்டி வசதிகள் இருந்தாலும் புகைமூட்டத்தின்போது காற்றில் பரவும் துகள்களை அவற்றின் வடிக்கட்டிகளால் தடுக்க முடியாது என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டு துணையமைச்சர் கோ பெய் மிங் தெரிவித்துள்ளார்.

புகைமூட்டக் காலகட்டத்தில் அனைத்து பாலர் பள்ளிகளில் உள்ள முக்கியக் கற்பித்தல், கற்றல் பகுதிகளில் காற்றுச் சுத்திகரிப்பான் வைக்கப்படவேண்டும் என்று ஆரம்பப் பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பு (எக்டா) கூறியுள்ளதைத் திரு கோ நாடாளுமன்றத்தில் விவரித்தார்.

குளிரூட்டி வசதிகள் இல்லாத பாலர் பள்ளிகளில் பயிலும் பிள்ளைகளைப் புகைமூட்டத்திலிருந்து பாதுகாப்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கேள்விகளுக்குத் திரு கோ பதிலளித்தார்.

புகைமூட்டத்தின்போது, குளிரூட்டி வசதி இல்லாத பாலர் பள்ளிகள் காற்றோட்டத்திற்கு மின்விசிறிகளைச் சார்ந்திருக்கின்றன என்றார் அவர்.

பாலர் பள்ளிகள் 24 மணி நேர காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீட்டின் அடிப்படையில் அடுத்த நாளுக்கான நடவடிக்கைகளைத் திட்டமிடுகின்றன. அதற்கேற்பப் நடவடிக்கைகளையும் அவை மாற்றியமைக்கின்றன என்று திரு கோ விளக்கம் அளித்தார்.

காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 200ஐத் தாண்டும்போது அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுகின்றன. காற்றில் உள்ள துகள்களின் ஒரு மணி நேர பிஎம்2.5 குறியீடு மிகவும் அதிகமான நிலையைத் தொடும்போது அனைத்து உட்புற உடல்சார் நடவடிக்கைகளும் நிறுத்தப்படுகின்றன.

பாலர் பள்ளிகள் நாள்பட்ட நுரையீரல், இதயக் கோளாறுகள் அல்லது சுவாசப் பிரச்சினைகள் உள்ள குழந்தைகளைத் தொடக்கத்திலேயே கண்டறிந்து அவர்களுக்கான மருந்துகள் உடனடியாகக் கிடைக்கும் வகையில் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

“உடல்நலக்குறைவு ஏற்படும் குழந்தைகளுக்காக முறையாக இயங்கும் காற்றுச் சுத்திகரிப்பான் பொருத்தப்பட்ட, நன்கு காற்றோட்டமுள்ள தனி அறை ஒன்று தயாராக இருக்க வேண்டும்,” என்றும் திரு கோ வலியுறுத்தினார்.

மேலும், கல்வியாளர்களுக்குப் போதுமான ஓய்வு கிடைப்பதை உறுதிசெய்யவும் புகைமூட்டத்தால் அதிகம் பாதிக்கப்படும் பணியாளர்களுக்கு ஆதரவளிக்கவும் சாத்தியமான இடங்களில் பணியாளர் வேலை ஏற்பாடுகளை மறுஆய்வு செய்யவும் பாலர் மையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்