சிங்கப்பூர் முழுவதும் காற்றுத்தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியது

சிங்கப்பூர் முழுவதும் காற்றுத்தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியது

முதியோர், குழந்தைகள், இதய, நுரையீரல் பாதிப்பு உள்ளோர் வெளிப்புற நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டும்
1 of 2
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

29 Sep 2026 - 10:30 am

2 mins read

சிங்கப்பூரின் ஐந்து வட்டாரங்களிலும் காற்றுத்தரம் ஆரோக்கியமற்ற நிலையில் உள்ளது. ஒரு மணி நேரத்துக்கென கணிக்கப்பட்ட காற்றில் படிந்துள்ள மாசின் அளவு (PM2.5 readings) தீவு முழுவதும் இரண்டாம் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.

தேசிய சுற்றுப்புற வாரியம் இரு வகையில் காற்றின் தரத்தைக் கணிக்கிறது.

24 மணிநேரத்துக்கான கணிப்பு பிஎஸ்ஐ எனப்படும். செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 29) நாடு முழுவதுக்குமான அந்தக் குறியீடு 120 என்ற எண்ணிக்கையில் இருந்தது. அது ஆரோக்கியமற்ற நிலையாகும்.

ஒரு மணி நேரத்துக்கான கணிப்பு பிஎம் 2.5 என்று அழைக்கப்படும். புகைமூட்டத்தால் உடலில் நுழையக்கூடிய நுண்துகள்களின் அளவு அதில் கணிக்கப்படுகிறது.

• நுண்துகள்கள்:

எல்லை தாண்டி வரும் புகைமூட்டம் அல்லது தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் மிகச்சிறிய துகள்களின் அளவை பிஎம் 2.5 கணிக்கிறது.

• உடல்நலப் பாதிப்பு:

அத்துகள்கள் மிகச்சிறியவை என்பதால், நுரையீரலின் ஆழமான பகுதி வரை ஊடுருவி, மனித ரத்த ஓட்டத்தில் கலக்கக்கூடியவை.

நான்கு வகை அளவுக் குறியீடுகள் அதில் பயன்படுகின்றன.

1) வழக்கமான அளவு என்பது 0 – 55 µg/m³ என்று கணிக்கப்படுவது. அது யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாது.

2) உயர்த்தப்பட்ட அளவு என்பது 56 – 150 µg/m³ என்று இருக்கும். காற்றில் நுண்ணிய துகள்கள் அதிகம் இருக்கும். எனவே இந்த அளவு அறிவிக்கப்பட்டால் முதியோர், குழந்தைகள், இதய, நுரையீரல் பாதிப்பு உள்ளோர்கள் வெளிப்புற நடவடிக்கைகளை கட்டுப்படுத்திக்கொள்ளவேண்டும்.

3) அதிக அளவு என்பது 151 – 250 µg/m³ என்ற அளவை எட்டியதைக் குறிக்கும். இதன்படி அதிக நுண்துகள்கள் காற்றில் படிந்திருக்கும். எனவே அனைவரும் வெளிப்புறச் செயல்பாடுகளைக் குறைக்கவேண்டும்.

4) மிகவும் அதிக அளவு என்பது 250 µg/m³ என்ற குறியீட்டைக் கடந்துள்ளதைக் காட்டும். அதன்படி வெளிப்புற நடவடிக்கைகள் அனைத்தும் முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும்.

அன்றைய தினம் காலை 7 மணிக்கான 24 மணிநேர பிஎஸ்ஐ அளவு வடக்குப் பகுதியில் 101 என்றிருந்தது. அது காலை 6 மணிக்கு 98 என கணிக்கப்பட்டது.

காலை நேரத்தில் தெற்குப் பகுதி 129, கிழக்குப் பகுதி 128, மேற்கில் 139, மத்திய வட்டாரம் 155 என அதற்கு முதல் நாள் இருந்த 101 என்ற அளவை அனைத்துப் பகுதிகளும் கடந்தன.

101 முதல் 200 வரை 24 மணிநேர பிஎஸ்ஐ கணிப்பு இருந்தாலே அது ஆரோக்கியமற்ற அளவைக் குறிக்கும். அதேபோல 56 முதல் 156 என பிஎம்2.5 உயர்த்தப்பட்ட நிலையில் கணிக்கப்பட்டால் நுண்துகள்கள் காற்றில் நெருக்கமாகப் படிந்துள்ளதைக் குறிக்கும்.

தேசிய சுற்றுப்புற வாரியத்தின் இணையத்தளத்திலும் அதன் myENV app செயலியிலும் நிகழ்நேர புகைமூட்டக் கணிப்புகளைப் பொதுமக்கள் பார்வையிடலாம்.

குறிப்புச் சொற்கள்
காற்றுத்தரம்மாசுபாடுதேசிய சுற்றுப்புற வாரியம்சுகாதாரம்ஆரோக்கியம்முதியோர்குழந்தைகள்பாதுகாப்புநடவடிக்கைஇதயநோய்உடல்நலம்