வடக்கு, தெற்குப் பகுதிகளில் காற்றின் தரம் மீண்டும் மிதமான நிலைக்குத் திரும்பியுள்ளது

வடக்கு, தெற்குப் பகுதிகளில் காற்றின் தரம் மீண்டும் மிதமான நிலைக்குத் திரும்பியுள்ளது

1 of 2
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
படம்: ராய்ட்டர்ஸ்

15 Sep 2026 - 9:50 am

2 mins read

சிங்கப்பூரின் அனைத்து வட்டாரங்களிலும் காற்றுத் தரம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 15) அதிகாலையில் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியது.

பின்னர் வடக்கு, தெற்குப் பகுதிகளில் நிலைமை மேம்பட்டு, காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு மிதமான வரம்புக்குத் திரும்பியது.

இரவு 7 மணி நிலவரப்படி, வடக்கு (92), தெற்கு (91) வட்டாரங்களின் 24 மணி நேர காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு நூறுக்குள் இருந்தது. கிழக்கு (111), மேற்கு (112), மத்திய (130) வட்டாரங்களில் அது தொடர்ந்து ஆரோக்கியமற்ற நிலையிலேயே இருந்தது.

காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 101 முதல் 200 வரை இருந்தால் அது ஆரோக்கியமற்ற நிலையைக் குறிக்கிறது. குறியீடு இத்தகைய நிலையை எட்டும்போது பொதுமக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்று தேசியச் சுற்றுப்புற வாரியம் அறிவுறுத்துகிறது.

51 முதல் 100 வரையிலான குறியீடு மிதமானதாகவும் 0 முதல் 50 வரையிலான குறியீடு, ‘நல்ல’ நிலையில் இருப்பதாகவும் கருதப்படுகின்றன.

பல நாள்களாக மிதமான நிலையில் இருந்த சிங்கப்பூரின் காற்றுத் தரம், செப்டம்பர் 14ஆம் தேதி வட பகுதியைத் தவிர, தீவின் மற்ற வட்டாரங்களில் ஆரோக்கியமற்ற நிலையை அடைந்தது. 51 முதல் 100 வரையிலான குறியீடு மிதமானதாகவும் 0 முதல் 50 வரையிலான குறியீடு, ‘நல்ல’ நிலையில் இருப்பதாகவும் கருதப்படுகின்றன.

சுற்றுப்புற வாரியம் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் அடுத்த 24 மணி நேரத்திற்கான காற்றின் தரம் மிதமான நிலையிலும் ஆரோக்கியமற்ற வரம்பின் கீழ்மட்டத்திலும் இருக்கும் என்று முன்னுரைத்திருந்தது.

கலிமந்தானில் ஏற்படும் தீச்சம்பவங்களில் மிதமானது முதல் அடர்த்தியானது வரையிலான புகை தொடர்ந்து காணப்படுவதாகவும் சிங்கப்பூரை நோக்கி அது நகர்வது தென்படுவதாகவும் வாரியம் கூறியது.

செப்டம்பர் 4ஆம் தேதியன்று மத்தியப் பகுதியில் காற்றின் தரம் முதன்முதலில் ஆரோக்கியமற்ற நிலைக்குக் குறைந்ததிலிருந்து, சிங்கப்பூரில் ஒரு வாரத்திற்கும் மேலாகப் புகைமூட்டமான சூழல் நிலவி வருகிறது.

அப்போதிருந்து, காற்றின் தரத்தைக் கண்காணிப்பதற்காகப் பிரிக்கப்பட்டுள்ள வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய ஆகிய ஐந்து மண்டலங்களில், மத்திய மண்டலமே தொடர்ந்து மிக உயர்ந்த காற்றுத் தூய்மைக்கேட்டு PM2.5 அளவுகளைப் பதிவு செய்து வருகிறது.

தேசிய சுற்றுப்புற வாரியத்தின் இணையதளத்தின்படி, மத்தியப் பகுதியில் தாம்சன், மேரிமவுண்ட், சின் மிங், அங் மோ கியோ, பீஷான், சிராங்கூன் கார்டன்ஸ், மெக்ரிட்சி, தோ பாயோ ஆகிய பகுதிகள் உள்ளன.

குறிப்புச் சொற்கள்