ஆஸ்திரேலியாவின் ஷோல்வாட்டர் பேயில் இடம்பெறும் ‘எக்சர்சைஸ் வாலபி’ பயிற்சியின் மூன்றாவது பாகத்தில் சிங்கப்பூர் ஆகாயப்படையின் விமான முனையப் படைப்பிரிவின் (Air Terminal Squadron) செயல்பாடுகள் விரிவாக காட்சிப்படுத்தப்பட்டன.
இந்தப் பிரிவு சிங்கப்பூர் ஆயுதப் படையின் ஹெலிகாப்டர் மூலம் மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு ஆதரவு அளிக்கும் முக்கிய அங்கமாகும். ராணுவத்தின் பணிக்கான தேவைகள், ஆகாயப்படையின் வான்வழித் திட்டமிடல் திறன்களால் தடையின்றிப் பூர்த்திசெய்யப்படுவதை உறுதிசெய்வதே இதன் முக்கியப் பணியாகும்.
சினூக் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி ராணுவ வீரர்களையும் ‘லைட் ஸ்ட்ரைக் வெகிக்கிள் மார்க் II’ (light strike vehicle mark II) போன்ற ராணுவ வாகனங்களையும் இந்த விமானப்படைப் பிரிவு ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக் கொண்டுசெல்கிறது.
‘பிக்-அப் ஸோன்’ எனப்படும், ஹெலிகாப்டர்களில் பொருள்கள் ஏற்றப்படும் இடங்களைத் தேர்வுசெய்து உறுதிப்படுத்துவதிலிருந்து தொடங்கி, ராணுவ மற்றும் ஆகாயப்படைப் பிரிவுகளுடன் ஒருங்கிணைந்து படைகளை ஏற்றிச் செல்லும் நடவடிக்கைகள், பெரிய சரக்குகளைக் கயிற்றில் தொங்கவிட்டு எடுத்துச் செல்கிற போக்குவரத்துப் பணிகள் என அனைத்தும் தடையின்றி, பாதுகாப்பாக நடைபெறுவதை உறுதிசெய்வதுவரை அனைத்திலும் விமான முனையப் படைப்பிரிவு முக்கிய இணைப்பாகச் செயல்படுகிறது.
இந்தப் படைப்பிரிவு, தரையிறங்கும் பகுதிகள் செயல்பாடுகளுக்குப் பாதுகாப்பானவை என்பதை உறுதிசெய்வதற்கும் பொறுப்பேற்கிறது. இதற்காக, பெரும்பாலும் சவாலான நிலப்பரப்புகளில், எடுத்துக்காட்டாக கரடுமுரடான தரை, உயரமான மரங்கள் போன்றவை உள்ள இடங்களில் நிலப்பரப்பின் நிலை குறித்த மதிப்பீடு மேற்கொள்ளப்படுகிறது.
செயல்பாட்டுத் திறனை உயர்த்தும் நோக்கில் இந்த விமான முனையப் படைப்பிரிவு தனது செயல்பாடுகளில் மின்னிலக்க கருவிகளை தொடர்ந்து ஒருங்கிணைத்து வருகிறது. ராணுவப் படைவீரர்கள் ஹெலிகாப்டரில் ஏறும் செயல்முறையைக் கண்காணிப்பது, சரக்கு எடையைத் துல்லியமாக பதிவுசெய்வது உட்பட பல பணிகள் இதில் இடம்பெறுகின்றன.
ஷோல்வாட்டர் பே வான்பரப்பும் பரந்த தரையிறங்கும் தளங்களும் பெரிய அளவிலான செயல்பாடுகளை மேற்கொள்ள விமான முனையப் படைப்பிரிவை அனுமதிக்கிறது.

