புகழ்பெற்ற அமெரிக்கப் பாடகி டெய்லர் சுவிஃப்ட் அடுத்த ஆண்டு சிங்கப்பூரில் நேரடி இசைவிருந்து படைக்கவுள்ளார்.
அவரது இசைநிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்க உள்ளூர்வாசிகள் மட்டுமன்றி, இவ்வட்டாரத்திலுள்ள மற்ற நாட்டினரும் ஆவலுடன் உள்ளனர்.
மலேசியாவைச் சேர்ந்த திரு ஹில்மி ஹமீதும் அவர்களில் ஒருவர். டெய்லர் சுவிஃப்ட்டின் சிங்கப்பூர் சுற்றுப்பயணம் அறிவிக்கப்பட்டதும் அவரை நேரில் காண்பதற்காக சிங்கப்பூருக்கு வர அவர் திட்டமிட்டார்.
இணையத்தள மேம்பாட்டாளரான 24 வயது ஹில்மி, விமானப் பயணச்சீட்டு, தங்குமிடம், மூன்று நுழைவுச்சீட்டுகள் ஆகியவற்றுக்காக கிட்டத்தட்ட 10,000 ரிங்கிட் (S$2,917) செலவிட்டுள்ளார்.
2024 மார்ச் 2-4, 7-9 என ஆறு இரவுகளில் சிங்கப்பூர் தேசிய விளையாட்டரங்கில் சுவிஃப்ட்டின் இசை நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது.
அவற்றைக் காண 300,000 பேர் திரள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. $88 முதல் $1,288 வரை என நுழைவுச்சீட்டு விலை நிர்ணயிக்கப்பட்டபோதும், இரண்டு நாள்களுக்குள் அவை விற்றுத் தீர்ந்தன.
இந்நிலையில், சுவிஃப்ட்டின் வருகையால் 2024 மார்ச்சில் பயணம் ஏறுமுகமாக இருக்கும் என்று இங்குள்ள ஹோட்டல்களும் விமான நிறுவனங்களும் உள்ளூர்ச் சுற்றுப்பயண நிறுவனங்களும் எதிர்பார்க்கின்றன.
சுவிஃப்ட்டின் இசை நிகழ்ச்சியால் ஹோட்டல் முன்பதிவுகள் அதிகரித்துள்ளன என்று சிங்கப்பூரில் 30 ஹோட்டல்களுக்குமேல் நடத்திவரும் ‘அக்கார்’ நிறுவனம் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
அதுபோல், 2024 மார்ச் 2-9 தேதிகளில் ஹோட்டல் முன்பதிவு 200 விழுக்காடு கூடியுள்ளதாக பான் பசிபிக் ஹோட்டல் குழுமத்தின் தலைமை வணிக, சந்தைப்படுத்தல் அதிகாரி சின் டான் கூறினார்.
சிங்கப்பூரில் தங்குமிடம் குறித்து வழக்கத்தைவிட 160 மடங்கு அதிக தேடல்கள் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டது மின்னிலக்கப் பயணத்தளமான ‘அகோடா’.
2024 மார்ச் 2-9 தேதிகளில் சிங்கப்பூருக்கான விமானங்கள் குறித்த தேடல் மூன்றரை மடங்கு கூடியதாக ‘எக்ஸ்பீடியா பிராண்ட்ஸ்’ பயண வல்லுநர் லாவண்யா ராஜாராம் கூறினார்.
சுவிஃப்ட் சிங்கப்பூர் வரும் காலகட்டத்தில், மணிலா, ஜகார்த்தாவில் இருந்து சிங்கப்பூர் வருவதற்கான விமானப் பயணக் கட்டணங்கள் 50% முதல் 130% வரை கூடியிருப்பதை விமானப் பயணச்சீட்டு முன்பதிவு இணையத்தளங்கள் தெரிவிக்கின்றன.
2024 மார்ச் மாதத் தொடக்க நாள்களில் ஜகார்த்தா - சிங்கப்பூர் ஜெட்ஸ்டார் ஏஷியா ஒருவழி விமானக் கட்டணம் 2.2 மில்லியன் ரூப்பியா (S$195). அதற்கு ஒரு மாதத்திற்குமுன் அக்கட்டணம் 829,000 ரூப்பியா மட்டுமே.
அதேபோல, 2024 பிப்ரவரி 29 முதல் மார்ச் 8 வரையிலான காலகட்டத்தில், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வழியாக மணிலாவிலிருந்து சிங்கப்பூர் வருவதற்கான சராசரிக் கட்டணம் US$295 (S$390) ஆக இருக்கிறது. இது, அதற்கு ஒரு மாதத்திற்கு முந்திய கட்டணத்தைப் போல இருமடங்கு என்பது குறிப்பிடத்தக்கது.