‘ஆல்பட்ராஸ் கோப்பு’ கண்காட்சி: முதல் நாளில் மக்கள் கூட்டம் திரண்டது

2 mins read
29eff42b-8884-4497-84d5-2b16b6957548
தேசிய நூலகத்தில் நடைபெறும் கண்காட்சியின் முதல்நாளான திங்கட்கிழமை (டிசம்பர் 8), அன்று திறந்த ஒரு மணி நேரத்துக்குள் நூற்றுக்கணக்கானோர் வந்திருந்தனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தேசிய நூலகத்தில் ‘ஆல்பட்ராஸ் கோப்பு: சிங்கப்பூர்ச் சுதந்திரம் அறியப்படாத செய்திகள்’ என்ற தலைப்பில் நிரந்தரக் கண்காட்சி திங்கட்கிழமை (டிசம்பர் 8) தொடங்கியுள்ளது.

அந்தக் கண்காட்சி பொதுமக்களுக்குத் திறந்துவிடப்பட்ட முதல் ஒரு மணிநேரத்துக்குள் நூற்றுக்கணக்கில் பார்வையாளர்கள் திரண்டனர். மலேசியாவிலிருந்து 1965ஆம் ஆண்டில் பிரிந்தபோது உருவாகிய பல ரகசிய ஆவணங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் பிரிவினைக்கான காரணங்கள் ஆழமாக விவரிக்கப்பட்டுள்ளன.

மேலும், பிரிவினைக்கு முன்பாக நடந்த இனக் கலவரங்களின் விவரங்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. மூத்த சிங்கப்பூரர்கள் பலர் அவற்றின் தாக்கத்தை நன்கு உணர்வர்.

தொழில்நுட்பத்தையும் செயற்கை நுண்ணறிவையும் கொண்டு பல காட்சி அங்கங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை சிங்கப்பூரருக்கும் மலேசியருக்கும் இடையே அந்தக் காலக்கட்டத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை நினைவூட்டும் விதமாகவும் வரலாற்றுப் பின்னணிகளை அறிந்துகொள்ளும் வகையிலும் அமைந்துள்ளன.

முன்னாள் நிதி அமைச்சர் கோ கெங் சுவீ, 1964ஆம் ஆண்டுமுதல் சேகரித்துள்ள பல கடிதங்களும் குறிப்புகளும் இந்தக் கண்காட்சியில் முக்கிய இடம்பெறுகின்றன. ஏனெனில், அவை மலேசியத் தலைவர்களிடம் அவர் நடத்திய பேச்சுவார்த்தைகள் பற்றியவையாகும். கண்காட்சி நான்கு பிரிவுகளாக அமைக்கப்பட்டுள்ளது. முதல் பிரிவில், ஓர் அறையில் நடந்த பல சம்பவங்களின் பின்புலங்கள் காணொளிகளாகப் பகிரப்படுகின்றன.

இரண்டாம் பிரிவில் ஆவணங்களைப் பற்றிய விரிவான விளக்கங்களும் மூன்றாம் பிரிவில் வரைபடங்கள் வழியாகப் பிரிவினையின் ஒவ்வொரு நிகழ்வும் தேதி, காலம், நேரம் வாரியாக வரையறுக்கப்பட்டுள்ளன.

நான்காம் அங்கம் ‘சேட்புக்’ எனப்படும் செயல்முறையைப் பயன்படுத்திக்கொள்ளும் பிரிவாகும். செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் வருகையாளர்கள் தாங்களே பல வரலாற்று நிகழ்வுகளை கேள்வி பதில் முறையில் புரிந்துகொள்ளலாம். சுதந்திரத்தைப் பெற சிங்கப்பூர் கடந்துவந்த பாதையை விரிவாக இங்கு அறிந்துகொள்ளலாம்.

நிகழ்வில் கலந்துகொண்ட 69வயது திரு பாலசுப்பிரமணியம், சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்த முழு விவரங்கள் கண்காட்சியில் அடங்கியுள்ளது என்றார்.

“அப்போது நிரந்தரவாசிகளாக மலேசியாவில் பெற்றோருடன் வாழ்ந்தேன். பிரிவினைக்குப் பிறகு சிங்கப்பூரில் வாழ்வதையே எனது தாயார் விரும்பினார். இறுதியில் பிரிவினை சிங்கப்பூருக்கு நன்மையாக அமைந்துவிட்டது,” என்று அவர் குறிப்பிட்டார்.

ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணிநேரம் வரை கண்காட்சியை முழுவதுமாக அனுபவிக்கத் தேவைப்படும். பத்து வயதுக்கு மேற்பட்டோருக்கு கண்காட்சி பரிந்துரைக்கப்படுகிறது.

இலவசக் கண்காட்சிக்கு நுழைவுச் சீட்டுகளை முன்பதிவு செய்துகொள்ளவேண்டும். மேல் விவரங்களுக்கு: https://thealbatrossfile.nlb.gov.sg/

குறிப்புச் சொற்கள்