நேப்பாள-திபெத் எல்லைப் பகுதியில் ஆகஸ்ட் 26ஆம் தேதி நிகழ்ந்த பனிப்பாறைச் சரிவைத் தொடர்ந்து பெருவெள்ளமும் நிலச்சரிவும் பேரழிவை ஏற்படுத்தின. அதில் காணாமற்போன சிங்கப்பூரர்கள் ஒன்பது பேர் ‘உண்மையிலேயே சிங்கப்பூரர்களா?’ என்று கேள்வி எழுப்பிய கருத்துப் பதிவுகளுக்கு மார்சிலிங்-யூ டீ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் அலெக்ஸ் யாம் தமது கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார்.
திங்கட்கிழமை (ஆகஸ்ட் 31) வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், நேப்பாளத்திற்கும் திபெத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் நிகழ்ந்த வெள்ளப்பெருக்கை ‘மிகவும் கொடூரமான துயரம்’ என்று குறிப்பிட்ட அவர், இன்னமும் தகவலறிய முடியாத சிங்கப்பூரர்களின் பெயர்களையும் பட்டியலிட்டார்.
எஸ்டீ லோ, கோஷ் அதிதி, இங் கிட் குவென், ராஜேஸ்வரன் அய்யாவூ, ரெங்கராஜன் பிரபு, ஷாலினி தேவி எலன் சோசன், சுபாக்ஷி ராவ்லா, சுமித் ராவ்லா, சுப்ரமணியம் திரவியம் ஆகியோர் அவர்கள்.
தமது பதிவிற்கான பின்னூட்டங்களாகப் பதிவிடப்பட்ட கருத்துகளைப் படித்தபோது, தம்மை மேலும் வேதனைக்குள்ளாக்கிய கருத்துகளைக் கண்டதாகத் திரு யாம் கூறினார்.
“குடும்பத்தினர் தங்கள் அன்புக்குரியவர்களின் நிலை குறித்த தகவலுக்காகத் தவிப்புடன் காத்திருக்கும் வேளையில், சிறுபான்மையினர் சிலர், காணாமற்போனவர்களின் பெயர்களையும் முகங்களையும் பார்த்துவிட்டு ‘அவர்கள் உண்மையிலேயே சிங்கப்பூரர்களா’ என்று கேள்வி கேட்கத் துணிந்துள்ளனர்,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அவர்களில் சிலர், மாயமானவர்கள் அங்கேயே சிக்கி இறந்துவிட வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் இந்தச் சிங்கப்பூர் குடிமக்களுக்கு அதிகாரிகள் ஏன் உதவ வேண்டும் எனக் கேட்டும் பதிவிட்டிருப்பதாக அவர் கூறினார்.
குடிநுழைவு, குடியுரிமைக் கொள்கைகள், சமூக ஒருங்கிணைப்பு ஆகியவற்றைப் பற்றி விவாதிக்கலாம்; ஆனால், அதற்கான நேரமும் இடமும் இதுவன்று என்றும் திரு யாம் வலியுறுத்தியுள்ளார்.
“இப்போது வேண்டாம். தங்கள் உயிரை இழக்கும் அபாயத்தில் உள்ள மனிதர்கள் குறித்து, அவர்களின் குழந்தைகளும் அன்புக்குரியவர்களும் தகவலுக்காகக் காத்திருக்கும் நேரத்தில் இதைப்பற்றிப் பேச வேண்டாம்,” என்று தமது ஃபேஸ்புக் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “ஒருவரிடம் இரக்கம் காட்டுவதற்கு அவர்களை உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை; அவர்களின் பாதுகாப்புக்காகப் பிரார்த்தனை செய்ய அவர்கள் உங்கள் சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டியதில்லை; அதேபோல் உங்கள் சிங்கப்பூர் அடையாளத்தை நிரூபிக்க இன்னொருவரின் சிங்கப்பூர் அடையாளத்தைக் குறைத்து மதிப்பிட வேண்டியதில்லை,” என்று அவர் பதிவிட்டார்.
இத்தகைய கருத்துகள் இனவாதத் தன்மை கொண்டவை மட்டுமன்றி, முற்றிலும் இரக்கமற்றவை என்றும் சிங்கப்பூரர்களாகிய நாம் இதைவிட முதிர்ச்சியுடன் செயல்பட முடியும் என்றும் அவர் கூறினார்.


