தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அவசர உதவி வாகனங்களில் வரும் நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கும் அலெக்சாண்டிரா மருத்துவமனை

2 mins read
4d3445b1-386a-4ac2-a3cc-e84fb2906ff3
வரும் அக்டோபர் மாதம் முதல் அலெக்சாண்டிரா மருத்துவமனைக்கு அவசர உதவி வாகனங்களில் வரும் நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அலெக்சாண்டிரா மருத்துவமனையில் தற்போது அவசர உதவி சிகிச்சை நிலையம் உள்ளது. ஆனால் அதில் நாட்பட்ட நோயாளிகளுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், வரும் அக்டோபர் மாதம் முதல் அலெக்சாண்டிரா மருத்துவமனைக்கு அவசர உதவி வாகனங்களில் வரும் நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2028ஆம் ஆண்டு முதல் அலெக்சாண்டிரா மருத்துவமனையில் அவசர சிகிச்சை உதவி நிலையம் முழுமையாகச் செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் இவ்வாண்டு முதல் அதன் சிகிச்சை வசதிகளைக் கொஞ்சம் கொஞ்சமாக மருத்துவமனை அதிகரிக்கிறது.

புதிய ஏற்பாட்டின்படி அக்டோபர் 1ஆம் தேதி முதல் உயிருக்கு ஆபத்தில்லாத வகையில் உள்ளவர்கள் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் அவசர உதவி வாகனங்களில் அலெக்சாண்டரா மருத்துவமனைக்குச் சென்றால் அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படும்.

அவசர உதவி வாகனங்களில் நெஞ்சு வலி, மூச்சுத் திணறல், தலைச்சுற்று, மயக்கம், வாதம், எலும்பு முறிவு, அழற்சி உள்ளிட்டவற்றுக்குச் சிகிச்சை வேண்டி வருபவர்களை மருத்துவமனை கவனிக்கும் என்று மருத்துவர் கெய்த் ஹோ தெரிவித்தார்.

அதேபோல் உயிருக்கு ஆபத்தான நிலையில் வருபவர்களுக்கும் தயக்கம் இல்லாமல் உடனடி சிகிச்சை வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் அவசர சிகிச்சை நாடி வருபவர்களின் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கவும் மருத்துவமனைகளின் சிரமத்தைக் குறைக்கவும் தேசிய அளவில் மருத்துவமனைகள் தயார்ப்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் சுகாதாரத் தேவைகளுக்கான சேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. மூத்த குடிமக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான தேவை அதிகமாக உள்ளது.

2024ஆம் ஆண்டு குடிமைத் தற்காப்புப் படை, 245,000 அவசர உதவி அழைப்புகளைப் பெற்றது. அதாவது நாள் ஒன்றுக்கு சராசரியாக 672 அழைப்புகள் வருகின்றன.

குறிப்புச் சொற்கள்