எல்லா கெத்தே திரையரங்குகளும் மூடப்படலாம்

1 mins read
111789a4-31d3-4f0f-b90e-ede07dbee96c
ஜெம் கடைத்தொகுதியில் இருந்த கெத்தே திரையரங்கம். - கோப்புப்படம்: சாவ்பாவ்

கெத்தே திரையரங்குகள் (கெத்தே சினிபிளெக்சஸ்) தாங்கள் எதிர்கொள்ளும் மில்லியன்கணக்கான கடன் சுமையைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

தனது திரையரங்குகள் எல்லாவற்றையும் மூடுவது உள்ளிட்ட தீர்வுகள் குறித்து கெத்தே திரையரங்குகள் ஆலோசித்துவருகின்றன. தாங்கள் எதிர்நோக்கிவரும் நிதிச் சவால்களைக் கையாள உதவக்கூடிய எல்லா தீர்வுகளையும் ஆராய்ந்துவருவதாக கெத்தே திரையரங்குகளை நடத்தும் எம்எம்2 ஏ‌ஷியா நிறுவனம் வியாழக்கிழமை (ஜூலை 17) தெரிவித்தது.

எம்எம்2 ஏ‌ஷியா, சிங்கப்பூர்ப் பங்குச் சந்தையில் இடம்பெற்றுள்ளது.

கடந்த மூவாண்டுகளில் ஆறு கெத்தே திரையரங்குகள் மூடப்பட்டுவிட்டன. தற்போது நான்கு கெத்தே திரையரங்குகள் செயல்பாட்டில் உள்ளன.

செஞ்சுரி ஸ்குவேர், காஸ்வே பாய்ன்ட் கடைத்தொகுதிகளின் உரிமையாளர்கள், அவற்றில் இருக்கும் தங்கள் திரையரங்குகளுக்கான வாடகை உள்ளிட்ட செலவுகளுக்கு 2.7 மில்லியன் வெள்ளியைச் செலுத்துமாறு திட்டவட்டமாகக் கேட்கும் கடிதங்களைத் தங்களுக்கு அனுப்பியதாக எம்எம்2, கடந்த பிப்ரவரி மாதம் தெரிவித்தது. இப்போது அந்தத் தொகை முன்று மில்லியன் வெள்ளிக்கும் மேல் அதிகரித்துள்ளது.

இன்னும் செலுத்தப்படாத வாடகைத் தொகையான சுமார் 3.45 மில்லியன் வெள்ளியைத் தருமாறு ஜெம் கடைத்தொகுதியின் உரிமையாளர்கள் இம்மாதம் திட்டவட்டமாகக் கேட்டனர். ஜெம்மில் உள்ள கெத்தே திரையரங்கம் மூடப்பட்டுவிட்டது.

அதேபோல் லிங்வா‌ஷா ஹோல்டிங்ஸ் நிறுவனம், ஏழு மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான தொகையைத் தங்களிடம் திருப்பித் தருமாறு திட்டவட்டமாகக் கேட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்