சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (என்யுஎஸ்), அதன் எல்லா முழுநேர ஊழியர்களும் அலுவலகம் வந்து வேலை செய்வதைக் கட்டாயமாக்கியுள்ளது.
புதன்கிழமை (அக்டோபர் 1) அது நடப்புக்கு வந்தது. இதன்படி வாரந்தோறும் ஐந்து நாள்களுக்கு என்யுஎஸ் ஊழியர்கள் அலுவலகம் வந்து வேலை செய்யவேண்டும்.
என்யுஎஸ்ஸின் மத்திய நிர்வாகப் பிரிவினர் செப்டம்பர் ஒன்றாம் தேதியிலிருந்தே வாரந்தோறும் ஐந்து நாள்கள் அலுவலகம் வந்து வேலை செய்வதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பல்கலைக்கழக பேச்சாளர் பதிலளித்தார். அக்டோபர் முதல் இந்த ஏற்பாடு பல்கலைக்கழகம் முழுவதற்கும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும், சிங்கப்பூரில் உள்ள 70 விழுக்காட்டு நிறுவனங்கள், 2023ஆம் ஆண்டுக்குள் ஊழியர்கள் அலுவலகத்தில் வேலை செய்யும் முறைக்குத் திரும்பியிருப்பதாக வியாழக்கிழமை (அக்டோபர் 2) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் அளித்த பதிலில் அவர் கூறினார். மனிதவள அமைச்சின் புள்ளிவிவரங்களை மேற்கோள்காட்டி அவர் இதனைத் தெரிவித்தார்.
“வேலையிடத்தில் ஊழியர்களுக்கிடையே நேரடித் தொடர்பு இருப்பதன் முக்கியத்துவத்தை என்யுஎஸ்ஸும் அறிகிறது,” என்றார் அவர்.
முன்னதாக 2023ல் என்யுஎஸ், வாரந்தோறும் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடிய நாள்களை இரண்டிலிருந்து ஒன்றுக்குக் குறைத்தது.
எனினும், தொடர்ந்து நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகள் வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பிட்ட சில வேலைகளுக்கு அது பொருந்தும் என்று அவர் கூறினார்.
என்யுஎஸ்ஸில் 12,000 ஊழியர்கள் வேலை செய்கின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த ஆண்டில் சிங்கப்பூரிலும் உலக நாடுகளிலும் பல நிறுவனங்கள், கூடுதல் நாள்கள் ஊழியர்கள் அலுவலகம் வந்து வேலை செய்வதைக் கட்டாயமாக்கியுள்ளன. சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வாரந்தோறும் ஐந்து நாள்கள் அலுவலகம் வந்து வேலை செய்யவேண்டும் என்று கிராப் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களிடம் கூறியது. மேலும் ஒன்றாகச் செயல்படவும் ஊழியர்கள் ஒருவருடன் ஒருவர் நன்கு தொடர்புகொள்ளவும் கிராப் அவ்வாறு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
உலகளவில் 83 விழுக்காட்டு முதலாளிகள் மூவாண்டுகளில் ஊழியர்கள் முழுமையாக அலுவலகம் வந்து வேலை செய்வர் என்று எதிபார்ப்பதாக கேபிஎம்ஜி ஆலோசனை நிறுவனம் சென்ற ஆண்டு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. 2023ல் அந்த விகிதம் 64 விழுக்காடாக இருந்தது.