தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒவ்வாமை: எஸ்ஐஏ மீது பயணி வழக்கு

1 mins read
27301ec4-ed6e-4792-b139-616f82be83ca
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) விமானங்கள். - கோப்புப்படம்: சாவ்பாவ்

தனக்கு இறால் ஒவ்வாமை இருப்பது விமான ஊழியர்களிடம் தெரியப்படுத்திய பிறகும் அவர்கள் இறால் உணவை தனக்கு வழங்கியதாகப் பயணி ஒருவர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) மீது வழக்கு தொடுத்துள்ளார்.

அந்த உணவை உட்கொண்டதால் தான் மோசமான ஒவ்வாமை பிரச்சினைகளுக்கு ஆளானதாக அப்பயணி குற்றஞ்சாட்டியுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த குழந்தை சுகாதார மருத்துவரான டாக்டர் பெனாரி, சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் எட்டாம் தேதி SQ026 விமானத்தின் பிஸ்னஸ் கிளாஸ் பிரிவில் பயணம் செய்தபோது இச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

அவ்விமானம் ஜெர்மனியின் ஃபிராங்க்ஃபர்ட் நகரிலிருந்து நியூயார்க்கின் ஜான் எஃப். கென்னடி அனைத்துலக விமான நிலையத்துக்குச் சென்று கொண்டிருந்தது.

விமானத்தில் தனக்கு வழங்கப்பட்ட உணவைக் கொஞ்சம் உட்கொண்டபோது அதில் இறால் இருந்ததை டாக்டர் பெனாரி உணர்ந்தார். பிறகு அவர் உடல்நலன் மோசமடையத் தொடங்கியதாக நம்பப்படுகிறது.

பிறகு அவர் விமான ஊழியர்களிடம் கேள்வி எழுப்பினார்.

சம்பந்தப்பட்ட விமான ஊழியர் தான் தவறு இழைத்தததை ஒப்புக்கொண்டதாக நீதிமன்ற ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பின்னர் டாக்டர் பெனாரிக்கு மோசமான ஒவ்வாமை பிரச்சினைகள் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.

அவரின் உடல்நலன் மிகவும் மோசமடைந்ததால் விமானம் அவசரமாக பிரான்ஸ் தலைநகர் பாரிசுக்கு மாற்றிவிடப்பட்டது.

அங்கு அவருக்கு இரு மருத்துவ நிலையங்களில் சிகிச்சையளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து எஸ்ஐஏ இழப்பீடாக நியாயமான தொகையைத் தனக்கு வழங்க வேண்டும் என்று டாக்டர் பெனாரி வழக்கு தொடுத்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்