தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அலியான்ஸ் - இன்கம் ஒப்பந்தம் ரத்து

2 mins read
b81e8c4c-b1f9-4803-a84c-ea5873989574
ஜெர்மன் காப்புறுதி நிறுவனமான அலியான்ஸ். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஜெர்மன் காப்புறுதி நிறுவனமான அலியான்சுக்கும் உள்ளூர் காப்புறுதி நிறுவனமான இன்கம் இன்ஷுரன்சுக்கும் இடையேயான உத்தேச ஒப்பந்தம் பொதுநலன் கருதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்கான அறிவிப்பை கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சரும் சட்ட இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங் திங்கட்கிழமையன்று (அக்டோபர் 14) நாடாளுமன்றத்தில் வெளியிட்டார்.

“முன்மொழியப்பட்ட உத்தேச ஒப்பந்தத்தை அரசாங்கம் மதிப்பீடு செய்தது. அதன் வடிவம், வருமானத் திறன் ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு பொதுநலன் கருதி தற்போது இந்த ஒப்பந்தத்தைத் தொடர முடியாது என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது,” என்று அவர் கூறினார்.

இதன் விளைவாக, ஒப்பந்தத்திற்கு வழங்கப்பட்ட ஒப்புதலை நிறுத்திவைக்க அனுமதிக்கும் வகையில் அரசாங்கம் அவசர அடிப்படையில் காப்புறுதிச் சட்டத்தில் திருத்தம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திருத்தத்தின் மூலம் வரும் காலங்களில் கூட்டுறவு நிறுவனங்கள் அல்லது கூட்டுறவு நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ள காப்புறுதி நிறுவனங்கள் தொடர்பான விண்ணப்பங்களில் கலாசார, சமூக, இளையர்துறையின் கருத்துகளை சிங்கப்பூர் நாணய ஆணையம் பரிசீலிக்க அனுமதி வழங்கப்படும்.

அலியான்ஸ் நிறுவனத்தின் நிலைப்பாடு அல்லது இன்கம் இன்ஷுரன்ஸ் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்கை அலியான்ஸ் நிறுவனம் பெறுவது குறித்து அரசாங்கத்திற்கு எந்தவொரு கவலையும் இல்லை எனத் திரு டோங் தெரிவித்தார்.

“ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளும் அதன் அமைப்பும்தான் எங்களின் கவலை. குறிப்பாக, அந்த ஒப்பந்தத்தின் மூலம் அவை நிறுவனமாவதுதான் அரசுக்குக் கவலை தருகிறது,” என்றார் திரு டோங்.

இந்தக் கவலைகள் முழுமையாகச் சரிசெய்யப்பட்டால், புதிய ஏற்பாடுகளைப் பரிசீலனை செய்ய அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அவர் சொன்னார்.

“இன்கம் இன்ஷுரன்ஸ் நிறுவனத்திடம் அதன் செலவினத்தைச் சமாளிக்க போதுமான மூலதனம் உள்ளது. அதனால், ஒப்பந்தம் ரத்தானது குறித்து அந்நிறுவனத்தின் சந்தாதாரர்கள் கவலைப்படத் தேவையில்லை,” என இன்கம் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் சந்தாதாரரின் நிலை குறித்து தெம்பனிஸ் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு டெஸ்மண்ட் சூ எழுப்பிய கேள்விக்கு திரு டான் பதிலளித்தார்.

“இன்கம் இன்ஷுரன்ஸ் நிறுவனத்தின் மூலதனத்தையும் சந்தை நிலையையும் வலுப்படுத்த உதவும் வலுவான கூட்டாளியை அரசாங்கம் ஆதரிக்கிறது. அலியான்ஸ் நிறுவனத்தின் நிலைப்பாடு அல்லது இன்கம் இன்ஷுரன்ஸ் நிறுவனத்தின் பெரும்பான்மை பங்கை அலியான்ஸ் நிறுவனம் பெறுவது எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை,” எனப் பிரதமர் லாரன்ஸ் வோங் இது குறித்து தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

“அலியான்ஸ் ஒரு பெரிய, உலகளாவிய காப்புறுதி நிறுவனம். அந்நிறுவனம் இன்கமுக்குத் தேவையான வருமானம் ஈட்டும் ஆற்றலையும் நிபுணத்துவத்தையும் கொண்டு வர முடியும்,” என அவர் மேலும் அந்தப் பதிவில் கூறினார்.

“இந்தக் குறிப்பிட்ட ஒப்பந்தத்தின் கட்டமைப்பும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளுமே எங்களின் கவலை. இந்தப் ஒப்பந்தத்தைத் தொடர முடியாது என்றாலும் இன்கம் இன்ஷுரன்ஸ் நிறுவனம் தொடர்புடைய புதிய ஒப்பந்தத்திற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்கள் கவலைகள் முழுமையாகத் தீர்க்கப்படும் வரை பிற கூட்டாளிகளுடன் இன்கம் இன்ஷுரன்ஸ் தனது பயணத்தைத் தொடரலாம்,” என்றார் பிரதமர் வோங்.

குறிப்புச் சொற்கள்