சிங்கப்பூரில் சுகாதாரச் சேவை வழங்கி வரும் ‘அலையன்ஸ் மெடிநெட்’டின் தரவுக்களஞ்சியத்தில் ஏறத்தாழ 110,000 உறுப்பினர்களின் தனிப்பட்ட தரவுகள் கசிந்துள்ளன.
இதனால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய விவரங்களில், உறுப்பினர்களின் முழுப் பெயர், தனிப்பட்ட அடையாள எண், பிறந்த தேதி, தொடர்புத் தகவல்கள், காப்பீட்டுச் சந்தா, வேலைவாய்ப்புத் தகவல்கள் ஆகியவை அடங்கும்.
‘அலையன்ஸ் மெடிநெட்’டை நடத்தி வரும் அலையன்ஸ் ஹெல்த்கேர் குழுமம், சிங்கப்பூர் பங்குச் சந்தையில் சனிக்கிழமை (அக்டோபர் 24) அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்தது.
தரவுக்களஞ்சியத்தில் உள்ள ஏழு உறுப்பினர்களின் வங்கிக் கணக்குத் தகவல்களும் ஓர் உறுப்பினரின் மருத்துவ சிகிச்சை விவரங்களும் கசிந்திருக்கக்கூடும் என்று கூறியுள்ளது.
பாதிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு அலையன்ஸ் மெடிநெட், தனது பங்காளிகள் அல்லது சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர்கள் மூலம் தகவல் தெரிவித்து வருவதாக அக்குழுமம் தெரிவித்தது.
ஒட்டுமொத்தமாகப் பாதிக்கப்பட்டோரில் சிங்கப்பூர் காப்பீட்டு நிறுவனங்களின் வாடிக்கையாளர்களும் அடங்குவர்.
தங்கள் வாடிக்கையாளர்களில் கிட்டத்தட்ட 4,400 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவோ அல்லது பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் என்றோ எச்எஸ்பிசி லைஃப், இன்கம் இன்சூரன்ஸ், சிங்லைஃப் ஆகிய காப்பீட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இவை தவிர சிக்னா, கிரேட் ஈஸ்ட்டர்ன், டோக்கியோ மரைன் ஆகிய காப்பீட்டு நிறுவனங்களும் தரவுக்கசிவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது,
தனது 6,103 உறுப்பினர்களின் தனிப்பட்ட தரவுகள் கசிந்திருக்கக்கூடும் என்று டோக்கியோ மரைன் தெரிவித்துள்ளது. இருப்பினும் உறுப்பினர்களின் வங்கிக் கணக்கு விவரங்களோ மருத்துவத் தகவல்களோ பாதிக்கப்படவில்லை என்றது அந்நிறுவனம்.
தனது மூன்று உறுப்பினர்களின் வங்கி விவரங்கள் கசிந்திருக்கக்கூடும் என்று கிரேட் ஈஸ்ட்டர்ன் நிறுவனம் தனது இணையத்தளத்தில் தெரிவித்துள்ளது.
அலையன்ஸ் மெடிநெட் உறுப்பினர்களுக்கான தரவுக்களஞ்சியம் இடம்பெற்றுள்ள கணினி கட்டமைப்பிற்குள் மூன்றாம் தரப்பினர் அனுமதியின்றி நுழைந்ததே இந்தத் தரவுக் கசிவுக்கான காரணம் என்று கூறிய குழுமம், இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளது.
நிலவரத்தை உன்னிப்பாகக் கவனித்து வருவதாக சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. அதேவேளை, இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக தனிநபர் தரவுப் பாதுகாப்பு ஆணையம் கூறியுள்ளது.
