சிங்கப்பூர் காப்புறுதி நிறுவனமான இன்கம் நிறுவனத்தின் 51 விழுக்காடு பங்குகளை 1.5 பில்லியன் அமெரிக்க டாலருக்குக் (S$2.1 பில்லியன்) கையகப்படுத்துவதற்கான முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தை அலியான்ஸ் நிறுவனம் கைவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்திற்குச் சிங்கப்பூர் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து இத்திட்டத்தை அலியான்ஸ் கைவிட்டதாக இதுகுறித்து நன்கு அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியிருந்தால், ஆசியாவிலேயே அனைத்து வகைக் காப்புறுதிகளை வழங்கும் பெரிய நிறுவனங்களின் பட்டியலில் தற்போது ஒன்பதாவது இடத்தில் இருக்கும் அலியான்ஸ் ஐந்து இடங்கள் முன்னேறி நான்காவது இடத்திற்கு வந்திருக்கக்கூடும்.
ஆனால், குறைந்த வருமானம் ஈட்டும் ஊழியர்களுக்குப் காப்புறுதிச் சந்தாவைக் குறைந்த விலையில் வழங்கும் இன்கம் நிறுவனத்தின் குறிக்கோளை இந்த ஒப்பந்தம் பாதிக்கும் எனப் பெரும்பாலான சிங்கப்பூரர்கள் அச்சமடைந்தனர்.
இதுகுறித்த செய்தி நாட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஒப்பந்தம் ரத்து தொடர்பாக கருத்து தெரிவிக்க அலியான்ஸ் மறுத்துவிட்டது என்றபோதும் வரும் வாரம் இதுகுறித்த தகவல் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெர்மானியக் காப்புறுதி நிறுவனமான அலியான்ஸ் ஒப்பந்தத்தை ரத்துசெய்யப்போவதாக புளூம்பெர்க் டிசம்பர் 13ஆம் தேதி செய்தி வெளியிட்டது.
1970களில் வறுமையிலிருக்கும் மக்களுக்குக் காப்புறுதி வழங்குவதற்காகத் தொடங்கப்பட்ட இன்கம் காப்புறுதி நிறுவனத்திற்குத் தற்போது 1.7 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.