மதியிறுக்கம் (ஆட்டிசம்) உள்ளவர்களுக்குப் பல்கலைக்கழகம், வேலை, வாழ்க்கைத்துணை ஆகிய வாய்ப்புகள் சமமாகக் கிடைக்க வேண்டும் எனப் பெரும்பாலான சிங்கப்பூரர்கள் நம்புகின்றனர்.
எனினும் நடைமுறையில் அதனைச் சிக்கல் உள்ளது எனச் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தின் அண்மைய கருத்தாய்வு தெரிவிக்கிறது.
பல்கலைக்கழகத்தின் கருத்தாய்வில் பங்கேற்ற 3,153 பேரில் பத்தில் ஒன்பதுக்கும் அதிகமானோர், மதியிறுக்கம் உள்ளவர்கள் பணியிடத்தில் தகுந்த ஆதரவுடன் சிறந்து விளங்க முடியும் என்று நம்புகின்றனர்.
எனினும், மதியிறுக்கம் உள்ளவர்களை வேலைக்கு எடுக்க முதலாளிகள் இன்னமும் தயங்குகின்றனர்.
மதியிறுக்கம் உள்ளவர்களுக்குத் திருமண வாய்ப்புகள் சமமாக வழங்கப்பட வேண்டும் என பெரும்பாலானவர்கள் கூறினர். இருந்தபோதும், பத்தில் நால்வர் மட்டுமே மதியிறுக்கம் உள்ளவரைத் துணைவராக ஏற்கச் சம்மதித்தனர்.
மதியிறுக்கம் உள்ளவர்களைச் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தக்கூடாது என்று பத்தில் ஒன்பது பேருக்கு மேல் கருதுகின்றனர். அதேசமயம், அத்தகையோரை அண்டை வீட்டாராக ஏற்க 88.5 விழுக்காட்டினர் மட்டுமே சம்மதித்தனர்.
செயின்ட் அண்ட்ரூஸ் மதியிறுக்க நிலையத்தின் ஆதரவோடு இக்கருத்தாய்வை ரோசி சிங் வழிநடத்தினார்.
“கொள்கை அளவில் மதியிறுக்கம் உள்ளோருக்கு சம வாய்ப்புகளை ஆதரித்தாலும், பாதிப்பு உள்ளவரை அண்டை வீட்டாராகவோ, சக ஊழியராகவோ, வாழ்க்கைத்துணையாகவோ கற்பனை செய்து பார்க்கும்போது நமது மனநிலை மாறுகிறது,” என்று ரோசி சிங் கூறினார்.
இத்தகைய இடைவெளிக்கு, மதியிறுக்கம் பற்றிய முழுமையான புரிதல் இல்லாததே முக்கியக் காரணம். 97.5 விழுக்காட்டினர் மதியிறுக்கம் பற்றிக் கேள்விப்பட்டுள்ளனர். ஆனால், 69.5 விழுக்காட்டினருக்கு அது குறித்துப் பாதிக்கும் குறைவாகவே தெரிந்திருந்தது என்று சிங் சுட்டிக்காட்டினார்.
சிங்கப்பூரில் மதியிறுக்கப் பிரச்சினை கண்டறியப்படுவது அதிகரித்து வருகிறது. 2016ஆம் ஆண்டில் 150 சிறார்களில் ஒருவருக்கு மதியிறுக்கம் இருந்தது. 2023ஆம் ஆண்டில் 100 சிறார்களில் ஒருவருக்கு மதியிறுக்கம் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
மதியிறுக்கம் உள்ள ஊழியர்களுக்கு வேலையிடங்களில் உண்மையான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். அவர்களைச் சமாளிக்க மேற்பார்வையாளர்களுக்குப் பயிற்சி தேவை என ஆய்வுக் குழுவினர் கேட்டுக்கொண்டனர்.
