ஆ. விஷ்ணு வர்தினி
திருவாளர் செந்தில்நாயகம் அருணாசலத்தின் பொழுது தமிழ் முரசு செய்தித்தாள் இன்றி ஒரு நாளும் விடிந்ததில்லை. அந்த அளவிற்கு அவரது வாழ்க்கையுடன் ஒன்றிவிட்டது தமிழ் முரசு.
காலை ஆறு அல்லது ஏழு மணிக்கெல்லாம் எழுந்த கையோடு தமிழ் முரசை வாசித்தாகவேண்டும். அவருக்கு மட்டுமல்ல. அவரது மனைவி திருவாட்டி அருணாசலம் செல்வமணிக்கும் அதே பழக்கம்தான். இணையர் இருவர்க்கும் இது கிட்டத்தட்ட 30 ஆண்டுகால வழக்கம்.
பட்டுக்கோட்டையிலிருந்து சிங்கப்பூருக்கு 1996ஆம் ஆண்டு குடிபெயர்ந்த திரு அருணாசலத்தின் நாளை இனிதாக்குபவை தமிழ் நேசனும் தமிழ் முரசும்தான்.
“நாட்டின் வளத்துக்கும் வளர்ச்சிக்கும் உறுதியளிக்கும் செய்திகள் எப்போதும் தமிழ் முரசின் முதல் பக்கத்தில் வெளிவரும்,” என்ற 65 வயது திரு அருணாசலம், அறிவியல் செய்திகள், சோதிடம், உள்ளூர் நடப்பு விவகாரங்கள் ஆகியவற்றை விரும்பி வாசிப்பவர்.
இவ்வாறு செய்தித்தாள்களை வாசிக்கும் பழக்கம் திரு அருணாசலத்திற்குச் சிறு வயதிலிருந்து ஏற்பட்ட ஒன்று. சிறிய எழுத்துகளைப் படிக்க முடியாத தம் தாத்தாவுக்காக இளவயதில் தினத்தந்தி, தினமணி போன்ற செய்தித்தாள்களை திரு அருணாசலம் படித்துக் காட்டினார்.
தமிழ் உச்சரிப்பைத் திருத்துவது, பெரிய சொற்களை எழுத்துக் கூட்டி படிக்கக் கற்றுத் தருவது என தம் தாத்தா வழிகாட்டியது திரு அருணாசலத்தின் நினைவில் நீங்கா இடம்பிடித்துள்ளது.
பின் அப்பாவின் ஊக்கத்தாலும் செய்தித்தாள்களை வழிக்கும் பழக்கம் தொடரவே நாளடைவில் சிங்கப்பூரிலும் அது நீடித்தது. தமிழ் முரசு வாசிப்பது திரு அருணாசலத்தின் அன்றாட வாழ்வில் ஓர் அங்கமும் ஆனது.
தொடர்புடைய செய்திகள்
“என் தாத்தா, அப்பாவோடு நான் செய்தித்தாள் வாசித்தே வளர்ந்தேன். அதேபோல என் இரு மகன்களுக்கும் வளரும் காலத்திலேயே தமிழ் முரசு, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள்களை அறிமுகப்படுத்தினேன். அவர்களிடம் நல்ல சிந்தனைகளைச் செதுக்க அவை உறுதுணையாகின,” என்றார் ஆலோசனை, வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்திவரும் திரு அருணாசலம்.
தாய்மொழி ஆற்றலையும் பற்றையும் பிள்ளைகளிடம் வளர்க்க குடும்பத்தின் பங்கு இன்றியமையாதது என்பதை இவரும் இவரின் துணைவியாரும் நன்கு உணர்ந்துள்ளனர்.
கணவரின் பழக்கம் தம்மையும் தொற்றிக்கொண்டதாகக் கூறிய 52 வயது திருவாட்டி செல்வமணி, குடும்பமாக செய்தித்தாள் வாசிப்பது பிள்ளைகளின் மொழியாற்றலை மேம்படுத்தியதோடு ஒன்றாகக் கூடுதல் நேரம் செலவிடவும் வகைசெய்தது என்றார். அதன் விளைவாக பல ஆண்டுகள் ஆகியும் தமிழ் முரசு, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள்களை வாசிக்கும் பழக்கத்தை இவர்களின் இரு மகன்களும் இன்றும் கைவிடவில்லை.
“இணைய மோசடி போன்ற குற்றங்கள் எப்படி நடக்கின்றன என்பதைச் செய்தித்தாள்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. உள்ளூரிலும் உலகெங்கிலும் உள்ள பலவித வாய்ப்புகளையும் நமக்கு விரல் நுனியில் தரும் பணியையும் செய்தித்தாள்கள் செய்கின்றன. அதன்மூலம் நம்மைப் பாதுகாக்கவும் வளர்த்துக்கொள்ளவும் முடிகிறது,” என்றார் திரு அருணாசலம்.
“தமிழ் முரசு செய்திகளைக் கூட்டியோ குறைத்தோ அல்லது பரபரப்பாக்கியோ வெளியிடுவதில்லை. அந்த நடைமுறையை இந்நாள்வரை அது காத்து வருகிறது. தொடர்ந்து அதே தரம் நீடிக்கும் என்று நம்புகிறேன்,” என்றும் அவர் சொன்னார்.
மின்னிதழ், செயலி போன்ற மின்னிலக்கப் போக்கை நோக்கி செய்தித்துறை நகர்ந்து வரும் வேளையில் செய்தித்தாள் நிலைத்திருக்க வாய்ப்புண்டு என்று இவ்விணையர் நம்புகின்றனர்.
நூற்றாண்டு கடந்து வெற்றி நடைபோடும் அச்சு இதழ்களில் தமிழ் முரசு உறுதியாக நிலைத்து நிற்கும் என்றும் இருவரும் கூறினர்.
vishnuv@sph.com.sg