அமேசான் இணையச் சேவைகள் (ஏடபிள்யூஎஸ்) குடியரசில் உள்ள மின்னிலக்க உள்ளமைப்பில் ஆகப் பெரிய முதலீட்டைச் செய்யவிருக்கிறது.
அடுத்த நான்கு ஆண்டுகளில், மேகக் கணினியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் திட்டங்களிலும் இங்குள்ள அதன் செயல்பாடுகளை விரிவுபடுத்துவதிலும் $12 பில்லியன் முதலீடு செய்யப்படவிருக்கிறது.
செயற்கை நுண்ணறிவுப் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கு உதவ, அது இங்குள்ள குறைந்தது 100 தொழில்நிறுவனங்களுடன் தொடர்ப் பயிலரங்குகளையும் வழிநடத்தும்.
மே 7ஆம் தேதி மரினா பே சேண்ட்சில் நடைபெற்ற ‘ஏடபிள்யூஎஸ்’ மாநாட்டில், அந்த முதலீட்டைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் செய்யப்படும் மொத்த முதலீடு $23.5 பில்லியனாகும் என்று அமேசான் அறிவித்தது.
2010ஆம் ஆண்டு முதல், அமேசான் மேகக் கணினியல் பிரிவு அதன் தரவு நிலையங்களுக்காக இங்கு அதன் வட்டாரத் தலைமையகத்தை நிறுவியபோது முதலீடு செய்த தொகையைக் காட்டிலும் இது ஒரு மடங்குக்கும் அதிகம்.
ஆசிய பசிபிக்கில் உள்ள ‘ஏடபிள்யூஎஸ்’ செயல்பாடுகளை விரிவுபடுத்த இத்தொகை பயன்படுத்தப்படும் என்று ‘ஏடபிள்யூஎஸ்’ மேலாலர் பிரிசிலா சோங் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுடன் நடைபெற்ற சிறப்பு நேர்காணலில் கூறினார்.
அமேசான் ஊழியர்களுக்குச் சம்பளம், மேலும் நிபுணத்துவச் சாதனங்களையும் மென்பொருள்களையும் இறக்குமதி செய்தல், கட்டுமானம், தரவு நிலையச் செயல்பாடுகள் உள்ளிட்டவை அவற்றில் அடங்கும் என்றார் அவர்.
அந்த முதலீடு, குடியரசின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏறக்குறைய $23.7 பில்லியன் சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக ‘ஏடபிள்யூஎஸ்’ அதன் சிங்கப்பூர் பொருளியல் தாக்க அறிக்கையில் கூறியது.
தொடர்புடைய செய்திகள்
அதோடு, 2028 வரை ‘ஏடபிள்யூஎஸ்’ மற்றும் அதன் மேகக் கணினியல் சேவைகளைப் பயன்படுத்தும் தொழில்கள் தொடர்பில் 12,300க்கும் மேற்பட்ட வேலைகளுக்கு அந்த முதலீடு ஆதரவு வழங்கும் என்றும் ‘ஏடபிள்யூஎஸ்’ தெரிவித்தது.
இங்கு ‘ஏடபிள்யூஎஸ்’ சேவைகள் 2010ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடையே ஒவ்வோர் ஆண்டும் உள்ளூர்த் தொழில்களில் குறைந்தது 4,800 முழு நேர வேலைகளுக்கு ஆதரவு அளித்திருந்ததாக, ‘ஏடபிள்யூஎஸ்’ அறிக்கை தெரிவித்தது.